“மதுரை மீதான தவறான கண்ணோட்டத்தை மாற்றுங்கள்” - எஸ்பி தேவநாதன் வலியுறுத்தல்

“மதுரை மீதான தவறான கண்ணோட்டத்தை மாற்றுங்கள்” -  எஸ்பி தேவநாதன் வலியுறுத்தல்
Updated on: 
1 min read

மதுரை: மதுரை என்றாலே வன்முறை என்ற தவறான கண்ணோட்டத்தை மாற்றுங்கள் என மதுரை ஒத்தக்கடையில் மினி மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்த மதுரை எஸ்.பி தேவநாதன் வலியுறுத்தினார்.

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில், பொதுமக்களிடையே உடல் ஆரோக்கியம், உடல் உறுதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில், ‘நம்ம மதுரை... நம்ம போலீஸ்!’ என்ற பெயரில் 4 கி.மீ. மினி மாரத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது. மினி மாரத்தான் ஓட்டத்தை காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் தொடங்கி வைத்தார். போட்டியில் அவரும் பங்கேற்று ஓடினார்.

முன்னதாக அவர் பேசியதாவது: மதுரையின் முகத்தை மாற்றுவதற்கான முதல் அடியை நீங்கள்தான் எடுத்து வைக்கிறீர்கள். மதுரை என்றாலே தவறாகவும், வன்முறை நிறைந்த நகரமாகவும் காட்டுகிறார்கள். அந்த நிலையை மாற்றி, இனிமேல் மதுரை களைகட்ட வேண்டும். அனைவரும் இணைந்து ‘ஹேப்பி மதுரை’யாக மாற்றுவோம்.

‘நம்ம மதுரை... நம்ம போலீஸ்’ என்ற நோக்கத்தில், மதுரையில் ஓட்டம், சைக்கிளிங் உள்ளிட்ட உடற்பயிற்சி நடவடிக்கைகள் அதிகரித்து, மகிழ்ச்சியான சூழல் உருவாக வேண்டும். பொதுமக்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் காவல்துறையிடம் தெரிவிக்கலாம்.

மக்களோடு மக்களாக இணைந்து செயல்படுவதற்காகத்தான் காவல்துறையினரும் இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்றுள்ளோம். மதுரையை நல்லுறவும் ஒற்றுமையும் நிறைந்த நகரமாக மாற்ற அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

“மதுரை மீதான தவறான கண்ணோட்டத்தை மாற்றுங்கள்” -  எஸ்பி தேவநாதன் வலியுறுத்தல்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்: பிரதமர் மோடி, முதல்வர் விஜய் தொடங்கி வைத்தனர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in