பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்: பிரதமர் மோடி, முதல்வர் விஜய் தொடங்கி வைத்தனர்

மாலை 4 மணி முதல் பொது மக்கள் பயணிக்கலாம்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்: பிரதமர் மோடி, முதல்வர் விஜய் தொடங்கி வைத்தனர்
Updated on: 
2 min read

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் 4-வது வழித்​தடத்தின் ஒரு பகுதியாக பூந்தமல்லி - வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி, முதல்வர் விஜய் இணைந்து கொடியைசத்துத் தொடங்கி வைத்தனர். மாலை 4 மணி முதல் பொது மக்கள் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி டெல்​லியில் இருந்து தனி விமானத்தில் புறப்​பட்டு, இன்று காலை 11 மணியளவில் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடியை, தமிழக ஆளுநர் அர்லேகர், முதல்வர் விஜய் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.

பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் போரூருக்கு சென்றபோது, விமான நிலையத்தில் இருந்து பரங்கிமலை ராணுவ மைதானம் வரை ரோடுஷோ மேற்கொண்டார். அப்போது ஏராளமான மக்கள் உற்சாகத்துடன் பிரதமரை வரவேற்று ‘மோடி... மோடி...’ என்று ஆர்ப்பணித்தனர்.

போரூர் வந்தடைந்த பிரதமர் மோடி, பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவையை தொடங்கிவைத்தார். அப்போது தமிழக முதல்வர் விஜய், தமிழக ஆளுநர் ஆர்லேகர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

அதன்பின்னர், மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் பயணித்தனர். தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, பிரதமருடன் இணைந்து பங்கேற்கும் முதல் அரசு நிகழ்ச்சி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

பூந்தமல்லி - வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி, முதல்வர் விஜய் இணைந்து கொடியைசத்துத் தொடங்கி வைத்தனர்.

சேவையை தொடங்கி வைத்த பிரதமர் கவுன்ட்டரில் டிக்கெட் எடுத்தார். தொடர்ந்து, பிரதமரும், முதல்வரும் மெட்ரோ ரயிலில் ஒன்றாகப் பயணித்தனர். தொடர்ந்து மாலை 4 மணி முதல் பொது மக்கள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் பயணத் திட்டம் என்ன? - பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்த பின்னர், போரூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கார் மூலமாக சென்னை ஐஐடி வளாகத்​துக்கு செல்கி​றார். பிரதமர் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்​டேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்கி​றார்.

தொடர்ந்து, அங்கு புதிதாக அமைக்​கப்​பட்​டுள்ள மூளை ஆராய்ச்சி மையத்தை திறந்து வைக்கி​றார்.

மதியம் 1:30 மணியள​வில், ரூ.13 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்​களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டு​கி​றார். மேலும், நிறைவடைந்த திட்டங்​களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்​பணிக்​கி​றார்.

சுமார் ரூ.3,700 கோடி மதிப்​பிலான முக்கிய தேசிய நெடுஞ்​சாலைத் திட்டங்​களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்​களைத் தொடங்கி வைக்கி​றார்.

மேலும் ரூ.750 கோடி மதிப்பில் ரயில்வே உள்கட்​டமைப்புத் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்​பணிக்​கி​றார். தமிழகத்தில் கடல்சார் உள்கட்​டமைப்பை வலுப்​படுத்​த​வும், சரக்கு கையாளும் திறனை அதிகரிக்​கவும் சென்னை துறைமுகத்தில் நான்கு உள்கட்டமைப்புத் திட்டங்களை தொடங்கி வைக்கி​றார்.

பிரதமர், சென்னையில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்​பரேஷன் நிறுவனத்தின் மணலி சுத்தி​கரிப்பு நிலையத்தில் குரூப் 3,4 லூப் ஆயில் பேஸ் ஸ்டாக்ஸ் திட்டத்​துக்கு அடிக்கல் நாட்டு​கி​றார். ஐஐடி நிகழ்​வுகளை முடித்துக் கொண்டு, நந்தம்​பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளியின் பொன்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்​கி​றார். அங்கு விழா மலரை வெளியிட்டு உரையாற்​றுகி​றார்.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

பிரதமரின் சென்னை வருகையையொட்டி, சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னையில் ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளின்கீழ் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பிரதமர் வருகையையொட்டி மீனம்பாக்கம், கிண்டி, கோட்டூர்புரம், போரூர், நந்தம்பாக்கம் ஆகிய 5 பகுதிகள் இன்று சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் ட்ரோன்கள் உள்ளிட்ட ஆளில்லா வான்வழிப் பொருட்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்: பிரதமர் மோடி, முதல்வர் விஜய் தொடங்கி வைத்தனர்
“பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள்” - முதல்வர் விஜய் வாழ்த்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in