முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ‘சந்திரயான்-4’ திட்டம்: இஸ்ரோ திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தகவல்

நிலவில் இருந்து மண் மாதிரிகள் பூமிக்கு எடுத்து வரப்படும்
முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ‘சந்திரயான்-4’ திட்டம்: இஸ்ரோ திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தகவல்
Updated on
1 min read

சென்னை: நிலவில் இருந்து மண் மாதிரிகளை பூமிக்கு எடுத்துவரும் ‘சந்திரயான்-4’ திட்டம் முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரோ சிறப்பு திட்டங்கள் இயக்குநர் வீரமுத்துவேல் தெரிவித்தார்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் 12-வது பட்டமளிப்பு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை வகித்து, பல்கலைக்கழக அளவில் பிஎட், எம்எட், படிப்புகளில் முதலிடம் பெற்றவர்கள், பிஎச்.டி முடித்தவர்களுக்கு பதக்கங்கள், பட்டங்களை வழங்கினார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) சிறப்பு திட்டங்கள் இயக்குநர் பி.வீரமுத்துவேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இவ்விழாவில் அவர் பேசியதாவது:

அரசுப் பள்ளியில் படித்த நான், என்ஐடி-யில் பொறியியல் படிப்பையும், சென்னை ஐஐடி-யில் எம்டெக், பிஎச்டி படிப்பையும் முடித்தேன். எனது இந்த வளர்ச்சிக்கு ஆசிரியர்கள்தான் காரணம். தனது மாணவன் தன்னை விட உயர்ந்த நிலைக்கு செல்லும் போது, அதை பார்த்து மகிழ்பவர்கள் ஆசிரியர்கள். சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிக்கு பிறகு, எனது ஆசிரியரை சந்தித்தபோது இதை உணர்ந்தேன்.

இன்றைய காலகட்டத்தில் கூகுள், ஏஐ மூலமாக பல தகவல்களை சில நொடிகளில் அறிய முடியும். ஆனால், ஒரு விஷயத்தை புதுமையாக, சுவாரசியமாக சொல்லித் தந்து, மாணவர்களின் ஆர்வத்தை தூண்டி, அவர்களது அறிவாற்றலை அதிகரிக்க ஆசிரியர்களால் மட்டுமே முடியும். பள்ளியில் படித்த அறிவியல் விதிகளும், கணக்கும்தான் விண்வெளித் துறையில் பெருமளவு பயன்படுகின்றன.

இஸ்ரோ நிறுவனம் நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. ஏராளமான ஆராய்ச்சி மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நிலவில் இருந்து மண் மாதிரிகளை பூமிக்கு கொண்டுவரும் வகையில் சந்திரயான்-4 திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இது முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் மேற்கொள்ளப்படும் திட்டம். இதில் பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு வருகிறோம். 2040-ல் இந்தியா நிலவில் கால்பதிக்கும்.

விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்பட்டு, புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகியுள்ளன. மாணவர்கள் செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்புகின்றனர். விண்வெளித் துறையில் புதிய தொழில் முனைவோர் உருவாகி வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளரும், உயர்கல்வித் துறை செயலருமான பொ.சங்கர் வரவேற்று ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். பதிவாளர் (பொறுப்பு) கே.ராஜசேகரன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) பி.கணேசன் மற்றும் பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ‘சந்திரயான்-4’ திட்டம்: இஸ்ரோ திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தகவல்
இடைக்கால பட்ஜெட், தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்க தமிழக அமைச்சரவை பிப்.5-ல் கூடுகிறது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in