

படம்: வி.எம்.மணிநாதன்
சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக, வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா - மேற்கு வங்க கடலோர பகுதிகளின் மேல் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஜூலை 3) கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
4-ம் தேதி கோவை, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
5, 6 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், மத்திய வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். அந்தமான் கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய வங்கக்கடலின் பெரும்பாலான பகுதிகளில் சூறாவளிக்காற்று அதிகபட்சமாக மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் தலா 3 செமீ, உபாசி, சோலையார், சின்கோனா, வால்பாறையில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.