

சென்னை: தமிழத்தில் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் நாளை (ஜூலை 10) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் நாளை (ஜூலை 10) கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூலை 11 முதல் 13-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், 14, 15 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
ஜூலை 11, 12, 13 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.
ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை முதல் 13-ம் தேதி வரை சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 18 செமீ, சோலையாரில் 11 செமீ, சின்கோனா, வால்பாறை, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் தலா 9 செமீ, கோவை மாவட்டம் உபாசியில் 8 செமீ, நீலகிரி மாவட்டம் மேல் பவானியில் 7 செமீ, தேவாலாவில் 6 செமீ மழை பதிவாகியுள்ளது.