“முதல் நாளில் இருந்தே வரி விலக்கு” - பிரதமர் மோடி வருகைக்கு முன் நியூசிலாந்து பிரதமர் அறிவிப்பு

“முதல் நாளில் இருந்தே வரி விலக்கு” - பிரதமர் மோடி வருகைக்கு முன் நியூசிலாந்து பிரதமர் அறிவிப்பு
Updated on
1 min read

ஆக்லாந்து: நியூசிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் 57 சதவீதம் அளவில் முதல் நாளில் இருந்தே வரி விலக்கு பெறும் என்று நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் நியூசிலாந்து வருகைக்கு முன்பாக அவர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நாளை (ஜூலை 10) நியூசிலாந்து செல்கிறார். ஏறக்குறை 40 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் அந்நாட்டுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை.

நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனின் அழைப்பின் பேரில் ஆக்லாந்து செல்லும் பிரதமர் மோடி, இருதரப்பு பொருளாதாரம், வர்த்தகம், வணிகம் சார்ந்த உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்தியாவுடன் நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்நிலையில், கிறிஸ்டோபர் லக்சன் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் நியூசிலாந்து வணிகங்கள் மிகப் பெரிய வளர்ச்சி காணப் போகின்றன. இந்தியாவுக்கு நாங்கள் ஏற்றுமதி செய்யும் பொருட்களில் 57 சதவீதம் முதல் நாளில் இருந்தே வரி விலக்கு பெறும்” என்று தெரிவித்துள்ளார்.

ஆக்லாந்தில் தங்கி இருக்கும்போது பிரதமர் மோடி, முன்னணி வணிக மற்றும் விளையாட்டு பிரபலங்களைச் சந்திக்க இருக்கிறார். மேலும், இந்திய வம்சாவளியினர் உடனான மாபெரும் சந்திப்பிலும் அவர் கலந்து கொள்கிறார்.

கடந்த 6-ம் தேதி, புதுடெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, முதலில் இந்தோனேசியாவுக்குச் சென்றார். தலைநகர் ஜகார்த்தாவில் அதிபர் பிரபோவோ சுபியான்டோவைச் சந்தித்து இரு தரப்பு உறவை வலுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையை நடத்திய அவர், நேற்று (ஜூலை 8) அங்கிருந்து ஆஸ்திரேலியா சென்றார்.

மெல்போர்னில் பிரதமர் அல்பனீஸை சந்தித்த பிரதமர் மோடி, பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடுகள், கல்வி, இரு நாட்டு மக்களுக்கு இடையேயான உறவுகள் ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்வதற்கான பேச்சுவார்த்தையை நடத்தினார். தனது இந்த பயணத்தை முடித்துக்கொண்டு அவர் நாளை நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்குச் செல்ல உள்ளார்.

“முதல் நாளில் இருந்தே வரி விலக்கு” - பிரதமர் மோடி வருகைக்கு முன் நியூசிலாந்து பிரதமர் அறிவிப்பு
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே யுரேனியம் விநியோக ஒப்பந்தம் கையெழுத்து: பிரதமர் மோடி அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in