

சென்னை: தமிழகத்தில் திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழையும், டெல்டா உள்ளிட்ட 25 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக பகுதிகளின் மேல் சுமார் 3.1 கிமீ முதல் 4.5 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தெற்கு கடலோர ஆந்திர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 1.5 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை, சுமார் 1.5 கிமீ உயரம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (அக்.17) நீலகிரி, கோவை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், வேலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ராமநாதபுரம், திருச்சி, நாமக்கல், கடலூர், கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யும். இதர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
18-ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோவை, ஈரோடு, நாமக்கல், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழையும், இதர பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும். இதேபோல் 19-ம் தேதியும் பரவலான கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அவ்வப்போது கனமழை பெய்யும்.