தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தேர்தல் ஆணைய குழு சென்னை வருகை

புதுச்சேரி உயரதிகாரிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை
தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தேர்தல் ஆணைய குழு சென்னை வருகை
Updated on
2 min read

சென்னை: இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று சென்னை வருகிறார். புதுச்சேரி உயரதிகாரிகளுடன் சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

தமிழக சட்டப்பேரவைக்கான பதவிக் காலம் முடிவடையும் நிலையில், தேர்தல் அறிவிப்பு மார்ச்சில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் இந்திய தேர்தல் ஆணையம் முனைப்பாக ஈடுபட்டுள்ளது. வழக்கமாக தேர்தல் நடைபெறும் மாநிலங்களில், தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையிலான குழுவினர் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்த பின் தேர்தல் தேதி அறிவிக்கப்படும்.

அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு இன்று சென்னை வருகிறது. இன்று மதியம் 1 மணிக்கு சென்னை வரும் குழுவினர், தனி விமானம் மூலம் புதுச்சேரி செல்கின்றனர். அங்கு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளை ஆய்வு செய்துவிட்டு, அங்கேயே இரவு தங்குகின்றனர். தொடர்ந்து நாளை 26-ம் தேதி காலை அங்கிருந்து புறப்பட்டு 11 மணிக்கு சென்னை வருகின்றனர்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கும் அவர்கள், முதல் கட்டமாக தலைமைச் செயலர், டிஜிபி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். அடுத்ததாக, வருமான வரி, சுங்கத் துறை, அமலாக்கத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

அதைத் தொடர்ந்து, அங்கீகரிக்கப் பட்ட தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதி களின் கருத்துகளை கேட்ட பின், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனாவுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கிவிட்டு 27-ம் தேதி மாலை டெல்லி செல்கின்றனர். முன்னதாக, எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர்கள் கடந்த வாரத்தில் தமிழகம், புதுச்சேரியில், இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு மற்றும் தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்து திரும்பினர்.

தலைமைத் தேர்தல் அதிகாரி வருகை, தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து நேற்று தலைமைச் செயலர் நா.முருகானந்தம் தலைமையில் உயரதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

8 ஐஏஎஸ் இடமாற்றம்: தலைமைச் செயலர் நா.முருகானந்தம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பொருளியல் மற்றும் புள்ளியியல் ஆணையர் ஆர்.ஜெயா, சிறப்பு முயற்சிகள் துறை செயலராகவும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை இயக்குநராகவும், செங்கல்பட்டு ஆட்சியர் த.சிநேகா, காஞ்சிபுரம் ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு சார் ஆட்சியராக இருந்த எஸ்.மாலதி ஹெலன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராகவும், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார் ஆட்சியர் கு.ரவிக்குமார், கரூர் மாவட்ட ஆட்சியராகவும், மத்திய அரசுப் பணியில் இருந்து திரும்பிய சந்திரசேகர் சாகமுரி, சிஎம்டிஏ முதன்மை செயல் அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், டிஎன்பிஎஸ்சி முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.சண்முகசுந்தரம், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலராகவும், நெ.பொன்மணி ஈரோடு வணிகவரி இணை ஆணையராகவும் நியமிக்கப்பட் டுள்ளனர். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தேர்தல் ஆணைய குழு சென்னை வருகை
சென்செக்ஸ் 1,069 புள்ளிகள் சரிவு: ஒரே நாளில் ரூ.4.6 லட்சம் கோடி இழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in