

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க திமுக ஆட்சியில் லஞ்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்டோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதி ஜி.அருள்முருகன் அறிவித்துள்ளார்.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதிகள் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 400 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், எம்எல்ஏ முத்துக்குமார், சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி நெல்லையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “கட்சி நிதி என்ற பெயரில் தனியார் பள்ளிகளிடம் இருந்து பணம் வாங்கியிருப்பது என்பது கடுமையான குற்றச்சாட்டாகும். அரசியல் வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் இந்த வழக்கில், மாநில அரசின் விசாரணை நியாயமாக இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது.
எனவே இந்த விவகாரத்தில் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்யும் வகையில் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும். மேலும், தனியார் பள்ளிகளிடம் லஞ்சம் பெற்றதற்கு தானே சாட்சி என தமிழக நிதியமைச்சர் சட்டப்பேவையில் பேசியுள்ளார். எனவே, அவரிடமும் இந்த வழக்கில் விசாரணை நடத்த வேண்டும்,” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதி அருள்முருகன் தெரிவித்தார். இதனிடையே, இந்த வழக்கின் விசாரணை வேறொரு அமர்வில் விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.