

திண்டுக்கல்: பண மோசடி வழக்கில் ‘பிடிவாரன்ட்’ பிறப்பிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞரை, பழநியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த போது கோவை சிபிசிஐடி போலீஸார் இன்று (செப்.22) காலையில் கைது செய்தனர்.
சென்னையைச் சேர்ந்தவர் சரவணன் கருப்பசாமி (45), உச்ச நீதிமன்ற வழக்கறிஞர். அகில உலக மனித உரிமை ஆணையத்தின், இந்திய பிரதிநிதி எனக்கூறி பலரிடம் அறிமுகம் செய்து கொண்டுள்ளார். மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராக சேர்ப்பதாகக் கூறி சென்னை மற்றும் கோவையில் பலரிடம் பணம் வசூலித்து மோசடி செய்தார்.
இது குறித்த புகாரின் பேரில், சிபிசிஐடி போலீஸார் விசாரித்து, 2008-ல் சரவணன் கருப்பசாமி மீது வழக்குப் பதிவு செய்தனர். இவர் மீது கோவை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு சாட்சி விசாரணை நடந்து வந்தது. ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர், விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு ஜாமீனில் வெளியே வரமுடியாத ‘பிடிவாரன்ட்’ பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, சிபிசிஐடி போலீஸார் அவரை கைது செய்வதற்காகத் தேடினர். இந்நிலையில் அவர் பழநியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் குடும்பத்துடன் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் (செப்.21) இரவு பழநி வந்த கோவை சிபிசிஐடி போலீஸார், இன்று (செப்.22) காலை அவரை விடுதியில் வைத்து கைது செய்து கோவைக்கு அழைத்து சென்றனர்.