காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்திய முதல்வர் விஜய்

காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்திய முதல்வர் விஜய்
Updated on
2 min read

சென்னை: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் விஜய் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை திருவான்மியூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். தொடர்ந்து பள்ளி வளாகத்தை பார்வையிட்டு, மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், ஜெகதீஸ்வரி, தலைமைச் செயலர் சாய்குமார் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

முதல்வர் விஜய் வருகையையொட்டி, பள்ளி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் மேற்கொண்டனர். மேலும், முதல்வர் விஜய்யை காண்பதற்காக பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளிக்கு வெளியில் திரண்டிருந்தனர்.

இடைத்தேர்தல் நடைபெற உள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகள் தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

காலை உணவுத் திட்டம்

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் நோக்கத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் கடந்த 2022 செப்.15-ம் தேதி தொடங்கப்பட்டது. பின்னர், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ் தினமும் காலையில் கிச்சடி, பொங்கல் என தினமும் ஏதேனும் ஒரு வகை உணவு வழங்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது மாநிலம் முழுவதும் உள்ள 37,447 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 19.34 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, காலை உணவுத் திட்டத்துக்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டு, 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ விரிவாக்கத் தொடக்க விழா இன்று காலை 8.30 மணி அளவில் நடைபெற்றது.

காமராஜர் பிறந்த விருதுநகரில் உள்ள பள்ளியில் இத்திட்டத்தை முதல்வர் விஜய் செப்.17-ம் தேதி தொடங்கி வைப்பார் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. முதல்வர் விஜய் லண்டனுக்கு அரசுமுறைப் பயணம் சென்றதால் திட்டம் தள்ளிவைக்கப்பட்டு, சென்னையில் இன்று நடந்தது.

இதன்மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 15,910 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 15.30 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். இதற்காக நடப்பு நிதி ஆண்டில் கூடுதலாக ரூ.217 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்)

“அன்பார்ந்த பெற்றோருக்கு, வணக்கம். பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகை புரிந்து, சிறப்பாகக் கல்வி கற்பதற்கு ஏதுவாக சத்தான, சுவையான காலை உணவு 22.9.2026 (செவ்வாய்க்கிழமை) முதல் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” - பிரியமுடன், ச.ஜோசப் விஜய், தமிழ்நாடு முதலமைச்சர், என்று குறிப்பிட்டு பள்ளி மாணவர்களின் பெற்றோர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அனுப்பப்பட்டது.

மெனு என்ன?

சென்னை - திருவான்மியூர் அரசு நடுநிலைப் பள்ளியில் முதல்வர் விஜய், நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் மாணவர்களுக்கு வெண் பொங்கல், சாம்பார் வழங்கப்பட்டது. முதல் நாள் என்பதால் இன்று சக்கரைப் பொங்கலும் வழங்கப்பட்டது.

காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்திய முதல்வர் விஜய்
ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in