காவிரி விவகாரம்: தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்

Updated on
1 min read

சென்னை: காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் முயற்சிகள் போதுமானதாக இல்லை. முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் மு.வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விவாயிகள் மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலையில்லா திண்டாட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆகஸ்ட் 6 முதல் 15-ம் தேதி வரை நடை பயண பரப்புரை நடைபெற உள்ளது.

காவிரி அனைவரின் உரிமை. தமிழகம் எப்போதுமே பெங்களூருவின் குடிநீர் தேவையை கணக்கில் கொள்ளாமல் இல்லை. அதை நாம் மதிக்கிறோம். தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் நெருக்கடி காலங்களில் கண்டிப்பாக கிடைக்க வேண்டும் என்பதை கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது போல் தமிழகத்திலும் அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும். ஒருமித்த கருத்து வராது. ஆகவே, நாங்கள் கூட்டத்தை கூட்டவில்லை என்று கூறுவது ஏற்புடையது அல்ல. தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் ஒரே கருத்தில் உறுதியாக உள்ளனர். அது தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதுதான். சட்டத்தின் வழியாக நீரினை பெறுவதற்கு, அனைத்து கட்சிகளும் காவிரி நதிநீர் பிரச்சினையில் ஓரணியில் நிற்கிறது என்பதை காட்ட அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். காவிரி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர் பேச வேண்டும். அமைதி காப்பது ஏற்புடையதல்ல.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். இது ஜனநாயகத்தில் தவிர்க்க முடியாத விதி. தமிழக அரசை விட காவிரி நதிநீர் விவகாரத்தில் வஞ்சிப்பதும் ஏமாற்றுவதும் கர்நாடக அரசுதான்.

தமிழக அரசின் முயற்சிகளும் போதுமானதாக இல்லை. சட்டப்படி நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரி நதிநீரை தமிழகத்துக்கு தரவேண்டும். போராடுவது சட்டம் நமக்கு வழங்கியுள்ள உரிமை. போராட்டங்களை ஒடுக்குவது, போராடக்கூடாது என்று நினைப்பது அரசு செய்யும் அரசியல் பிழை. காவிரி விவகாரத்தை பொறுத்தவரை, முதல்வர் அனைத்து பிரதிநிதிகளை அழைத்து பேச வேண்டும்.

மேலிருந்து கீழ் வரை மின்துறையில் ஆய்வுகள் தேவைப்படுகிறது. நிர்வாக குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். சாதாரண மக்கள் எதன் பொருட்டும் பாதிப்படையக்கூடாது. பட்ஜெட்டை பொறுத்தவரை, ஒட்டிய வயிறு, குழிந்த கன்னங்களை உடைய மக்களின் வாழ்வியலை கணக்கில் கொண்டு பட்ஜெட் வகுக்கப்பட வேண்டும். உழைக்கிறவர்கள் ஏழைகள் அருகில் நின்று பட்ஜெட் பேசப்பட வேண்டும். எளியவர்களை உழைப்பாளர்களை கூலி மக்களை அடையாளப்படுத்துகிற பிரதிநிதிகளை அழைத்து பட்ஜெட் குறித்தான கருத்து கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்</p></div>
பிரிஜ் பூஷன் விடுவிப்பை எதிர்த்து மேல்முறையீடு: மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in