

பாமக தலைவர் அன்புமணி
சென்னை: “காவிரி - கோதாவரி இணைப்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டும். இந்தத் திட்டத்துடன் சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்கள் மாநாட்டை பிரதமர் தலைமையில் நடத்தி கருத்தொற்றுமை ஏற்படுத்த வேண்டும்" என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘கர்நாடகத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய 3 மாநில முதல்வர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் காவிரி - கோதாவரி நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பப்பட்டிருப்பதும் மகிழ்ச்சியும், மனநிறைவும் அளிக்கிறது. நதிநீர் சிக்கல்களைத் தீர்ப்பதில் தென் மாநில முதல்வர்கள் மூவரிடம் ஏற்பட்டிருக்கும் கருத்தொற்றுமை வரவேற்கத்தக்கது மட்டுமின்றி, காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்துக்கு ஏற்பட்டுள்ள தடைகளை தகர்ப்பதற்கான ஆயுதமும் ஆகும்.
கர்நாடக மாநிலம் கொப்பல் பகுதியில் உள்ள துங்கபத்ரா அணையின் 19-ம் கதவு கடந்த 2024-ம் ஆண்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அணையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 33 கதவுகளின் திறப்பு விழா அங்குள்ள முனீராபாத் நகரில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோரும் கலந்து கொண்டவர். இந்த நிகழ்ச்சியிலும், அதற்கு முன்பாக நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்திலும் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ‘‘காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்தை மத்திய அரசின் திட்டமாக செயல்படுத்த வேண்டும். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய 4 மாநிலங்களும் பயனடையும்’’ என்று கூறியிருக்கிறார்.
இந்த யோசனைக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி எதிர்ப்பு தெரிவிக்காதது மட்டுமின்றி, அனைத்து நதிநீர் சிக்கல்களுக்கும் விரைந்து தீர்வு காண வலியுறுத்தியுள்ளார். அதன் தொடர்ச்சியாக துங்கபத்ரா ஆற்று நீர் சிக்கல் தொடர்பாக அதை பகிர்ந்து கொள்ளும் கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கிடையே தொடர் பேச்சுகளை நடத்துவது என்றும், அப்பேச்சுகளை மத்திய அரசு ஒருங்கிணைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆற்று நீர் சிக்கல்களை தீர்ப்பதற்கான கருத்தொற்றுமை தென் மாநில முதல்வர்களிடம் ஏற்பட்டிருப்பது மிக முக்கியமான திருப்பம் ஆகும். இதே கருத்தொற்றுமை இல்லாததால் தான் காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் முடங்கிக் கிடக்கிறது. நதி நீர் சிக்கல்களைத் தீர்ப்பது, நதிகளை இணைப்பது ஆகியவற்றுக்கு ஆதரவான சூழல் தென் மாநிலங்களின் முதல்வர்களிடம் ஏற்பட்டுள்ள நிலையில், அதைப் பயன்படுத்தி இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்.
காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் சாத்தியமற்றது அல்ல. இந்தியாவின் வற்றாத நதிகளில் ஒன்றான மகாநதியிலிருந்து சத்தீஸ்கர், ஒடிசா வழியாக கோதாவரிக்கு 429.60 டிஎம்சி தண்ணீர் கொண்டு வந்து, அத்துடன் கோதாவரியில் ஏற்கனவே உள்ள உபரி நீரையும் சேர்த்து மொத்தம் 922.48 டிஎம்சி நீர் கிருஷ்ணா நதிக்கு கொண்டு செல்லப்படும். கிருஷ்ணா ஆற்றில் இருந்து ஆந்திர மாநிலத்தின் தேவைக்கு பயன்படுத்தப்பட்டது போக, மீதமுள்ள 497.23 டிஎம்சி தண்ணீர் பெண்ணாற்றிற்கு திருப்பிவிடப்படும். பெண்ணாற்றிலிருந்து காவிரிக்கு 302.42 டிஎம்சி நீரை ஆண்டுதோறும் வழங்குவது தான் காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் ஆகும்.
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான வரைவு திட்ட அறிக்கை 2019-ம் ஆண்டு மார்ச் மாதமே தயாரிக்கப்பட்டு விட்டது. இந்த வரைவுத் திட்டத்திற்கு சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களும் ஒப்புதல் அளித்தால், வரைவுத் திட்டத்தை இறுதி செய்யப்பட்ட திட்டமாக மாற்றி ரூ.86,962 கோடியில் இத்திட்டத்தை செயல்படுத்துவது தான் மத்திய அரசின் நிலைப்பாடு. ஆனால், தெலங்கானா எதிர்ப்பதால் இத்திட்டம் முடங்கிக் கிடக்கிறது.
கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை மகா நதியிலிருந்து தொடங்கினால், இணைப்புப் பணிகளை முடிக்க நீண்ட காலம் ஆகும் என்பதால் கோதாவரியிலிருந்து தொடங்கலாம் என்று மத்திய அரசு கருதுகிறது. கோதாவரி ஆற்றின் உபரி நீர் தெலங்கானாவின் எதிர்காலத் தேவைகளுக்கு வேண்டும் என்பதால், அதிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என தெலங்கானா உறுதியாகக் கூறிவிட்டது.
கோதாவரி ஆற்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 1100 டிஎம்சி உபரி நீர் வீணாக கடலில் கலக்கிறது. அதன் எதிர்காலத் தேவைகளை கணக்கிட்டுத் தான் கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்திற்காக 493 டிஎம்சி நீரை மட்டும் பயன்படுத்திக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் தெலங்கானாவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதால் கர்நாடகத்திற்கு நன்மை தான் என்பதால், அம்மாநிலம் இத்திட்டத்தை எதிர்க்காது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்தை ஆதரித்திருப்பது மட்டுமின்றி, அதை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் குரல் கொடுத்துள்ளார்.
மகாநதி - கோதாவரி இணைப்புக்காகத் தான் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்களின் ஒப்புதல் தேவை. இந்த இணைப்புக்கு அந்த மாநிலங்களும் பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இத்தகைய சூழலில் காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த தெலங்கானாவின் ஒப்புதல் மட்டுமே தேவை.
கோதாவரி - காவிரி இணைப்பை ஒருங்கிணைக்கும் பணி தேசிய நீர் மேம்பாட்டு முகமை என்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த முகமைக்கு ஏராளமான பிற பணிகள் இருப்பதால், இப்பணியை திறம்பட மேற்கொள்ள இயலாது. எனவே, இந்தப் பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் ஒருங்கிணைத்து செயல்படுத்த சிறப்பு பணிக்குழுவை அமைக்க வேண்டும்.
அத்துடன் இந்தத் திட்டத்துடன் சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்கள் மாநாட்டை பிரதமர் தலைமையில் நடத்தி கருத்தொற்றுமை ஏற்படுத்தவும், அதைத் தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்து காவிரி - கோதாவரி இணைப்பு பணிகளை தொடங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.