கல்லூரி மாணவர் சேர்க்கையில் சாதி கேட்பது தவிர்க்கப்படுமா? - அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

கல்லூரி மாணவர் சேர்க்கையில் சாதி கேட்பது தவிர்க்கப்படுமா? - அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

மதுரை: தமிழகத்தில் பள்ளி மாணவர் சேர்க்கையில் சாதி கேட்பது கட்டாயம் இல்லை என்ற அரசாணை கல்லூரி மாணவர் சேர்க்கைக்கும் விரிவுபடுத்தப்படுமா என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.

விருதுநகர் மாவட்டம் இனாம்ரெட்டியபட்டியைச் சேர்ந்த விக்ரமன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு:

தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் சாதி கேட்கக்கூடாது என விதி உள்ளது. இதை மீறி கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையின்போது விண்ணப்பதாரர்களின் சாதி மற்றும் சமூக விவரங்கள் கேட்கப்படுகின்றன. இது மாணவர்கள் தேர்வு மற்றும் சேர்க்கை செயல் முறைகளில் பாகுபாடு ஏற்பட வழிவகை செய்யும்.

எனவே, தமிழ்நாட்டில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் விண்ணப்பப் படிவங்களில் சாதி அல்லது சமூக விவரங்களை கட்டாயமாகச் சேகரிக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், இடைநிலைப் பள்ளிச் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழில் சாதி, சமயம் இல்லை என குறிப்பிடவோ, இவ்விரு பத்திகளை காலியாக விடவோ செய்யலாம் என பள்ளிக் கல்வித் துறை ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. பெற்றோர் விரும்பாவிட்டாலும், தெரிவிக்க இயலாவிட்டலும் சாதி, சமய குறிப்பு தேவையில்லை என அரசாணை உள்ளது என கூறப்பட்டது.

மனுதாரர் தரப்பில், இந்த அரசாணை 2000-மாவது ஆண்டு வெளியானது. இந்த அரசாணை நடைமுறைபடுத்தப்படவில்லை. பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் இந்த அரசாணையை அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கும் கட்டாயமாக்க கோரப்பட்டது.

பின்னர் நீதிபதிகள், பள்ளிச் சேர்க்கையைப்போல கல்லூரி மாணவர் சேர்க்கையின்போதும் சாதியை குறிப்பிட வேண்டியது கட்டாயம் அல்ல என சேர்த்து அரசாணை பிறப்பிப்பது தொடர்பாக அரசிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

கல்லூரி மாணவர் சேர்க்கையில் சாதி கேட்பது தவிர்க்கப்படுமா? - அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
இந்திய தேர்தல் ஆணையர் இன்று சென்னை வருகை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in