

சென்னை: துணை முதல்வர் உதயநிதிக்கு ரூ.20.64 கோடிக்கு அசையும், அசையா சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இடம் பெற்றுள்ள விவரம்: உதயநிதி தனது கையிருப்பில் ரூ.50,000, அவரது மனைவி கிருத்திகா கையிருப்பில் ரூ.75,000 இருப்பதாக தெரிவித்துள்ளார். மகள் தன்மயா வங்கிக் கணக்கில் நிரந்தர வைப்பு நிதியாக ரூ.2,56,940 இருப்புள்ளது.
அதேபோல், தனது பெயரில் ரூ.1 கோடி மதிப்பிலான டிபென்டர் கார், ரூ.23 லட்சம் மதிப்புடைய இன்னோவா கார் இருப்பதாகவும், தங்கம், வெள்ளி, வைர நகைகள் ஏதுமில்லை என்றும், மனைவி கிருத்திகாவிடம் 1,600 கிராம் தங்க நகைகள் இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். ஒட்டுமொத்தமாக, அசையும் சொத்துகளாக உதயநிதியிடம் ரூ.12.92 கோடியும், அவரது மனைவியிடம் ரூ.13.25 கோடியும், மகளிடம் ரூ.2.56 லட்சமும் உள்ளன.
இதுதவிர, உதயநிதி பெயரில் ரூ.7.72 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் உள்ளன. அவரது மனைவி கிருத்திகா உதயநிதி பெயரில் அசையா சொத்துகள் இல்லை. மொத்தமாக உதயநிதி பெயரில் மட்டும் ரூ.20.64 கோடிக்கு அசையும், அசையா சொத்துகள் உள்ளன. மேலும், அவர் பெயரில் தற்போது 10 குற்றவியல் வழக்குள் நிலுவையில் இருக்கின்றன.
இதற்கிடையே, கடந்த 5 ஆண்டுகளில் வருமான வரி கணக்கில் காட்டப்பட்ட வருமானம் அடிப்படையில் உதயநிதியைவிட, கிருத்திகாவின் வருவாய் அதிகரித்துள்ளது. 2022-23-ம் ஆண்டில் ரூ.7.94 கோடியாக இருந்த உதயநிதியின் ஆண்டு வருமானம், 2024-25-ம் ஆண்டில், ரூ.10.40 லட்சமாக குறைந்துள்ளது. அதேபோல், 2023-24-ம் ஆண்டில், ரூ.44.94 லட்சமாக இருந்த, கிருத்திகாவின் வருமானம், 2024-25-ல் ரூ.2.92 கோடியாக உயர்ந்துள்ளது.
மேலும், 2021-ம் ஆண்டு தேர்தலில் உதயநிதி காட்டியதைவிட, அவரின் சொத்து மதிப்பு தற்போது குறைந்துள்ளது. 2021-ல் உதயநிதிக்கு ரூ.21.13 கோடியும், கிருத்திகாவுக்கு ரூ.1.15 கோடியும் அசையும் சொத்துகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
துணை முதல்வர் உதயநிதி தாக்கல் செய்த சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தில், அவரது மகன் இன்பநிதி பெயர் மற்றும் சொத்து விவரங்கள் இடம் பெறவில்லை. 2021-ம் ஆண்டு உதயநிதி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இன்பநிதி பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால், தற்போது அவர் பெயரில்லை. மேலும், இன்பநிதி தற்போது ‘ரெட் ஜெயிண்ட்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்படுகிறார் என்பது கவனிக்கத்தக்கது.