

திருச்சி: “என் கடைசி படமான ஜனநாயகன் வெளிவந்தால், மனதுக்கு நெருக்கமான சொந்த பந்தங்களான நாம், நெஞ்சுக்கு நெருக்கமாகிவிடுவோம். நாம் நெருக்கமாகி தேர்தலில் மிகப் பெரிய ஆயுதமாக மாறிவிடுமோ என்பதற்காக ஒரு கூட்டு சூழ்ச்சி நடக்கிறது. உங்களுக்காக நீதி கேட்க வந்த எனக்கும்தான் நீதி வேண்டும்” என்று திருச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசினார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள மரக்கடை எம்ஜிஆர் சிலை முன்பு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் தவெக தலைவர் விஜய் பேசியவது: “தமிழகத்தில் காஸ் சிலிண்டர் பிரச்சினை பெரிதாக இருக்கிறது. காஸ் சிலிண்டர் பிரச்சினையால் ஏராளமான டீக்கடைகள், ஹோட்டல்கள் மூடிவிட்டனர். இதனால் எவ்வளவு கஷ்டங்கள், நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளது. அவர்கள் (பாஜக) கொஞ்சம் உஷாராக இருந்திருந்தால் காஸ் தட்டுப்பாட்டை தவிர்த்திருக்கலாம். இவர்களாவது (திமுக) முன்னெச்சரிக்கையாக இருந்திருந்தால் காஸ் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்தி இருக்கலாம். இவர்கள் இருவரும்தான் (திமுக - பாஜக) இதற்கு காரணம்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டால் நமக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை என்பார். அவரது வீட்டில் ஒரு ரெய்டு, ஒரு பிரச்சினை என்றால் டெல்லிக்கு பறந்து சென்று வருவார். தமிழக முதல்வர் காஸ் சிலிண்டர் பிரச்சினைக்கு டெல்லிக்கு பறந்து சென்று வந்தால் கொஞ்சம் பிரயோஜனமாக இருக்கும். எதையெல்லாம் செய்ய முடியாதோ, அதையெல்லாம் பொய் வாக்குறுதியாக கொடுத்து ஏமாற்றுவது முதல்வரோட வேலை. தற்போது அடுத்த செட் பொய் வாக்குறுதிகளை ரெடி பண்ணிட்டார்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத, அடிப்படை வசதிகள் செய்யாத திமுக அரசை நாம் தூக்கி எறியவேண்டும். திருச்சியை சேர்ந்த ஒரு அமைச்சர் இருக்கிறார். நகராட்சி துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சமாக வாங்கிட்டு, தகுதியானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் செய்திருக்கிறார். இது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை.
இளைஞர்கள், இளம்பெண்களின் வேலை வாய்ப்புகளை பறித்த ஸ்டாலின் அரசை தூக்கி வீசி எறியவேண்டும். பாதுகாப்பு இல்லாத, சட்டம் - ஒழுங்கு இந்த அரசை தூக்கி எறிய வேண்டும். நகராட்சித் துறையில் மட்டும் ரூ.1,000 கோடி ஊழல் என்றால் மற்ற துறைகளை எடுத்து பார்த்தால் தலைசுற்றி போய்விடும்.
எனது சொந்த பந்தமான உங்களிடம் உரிமையுடன் ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்கிறேன். இந்த தேர்தலில் ஏலத்தில் எடுத்துள்ள கல்லாபெட்டி கூட்டணியோடு சேர்ந்து, ‘மற்றும் பலர்’ கூட்டணியோடு கள்ள கூட்டணியாக சேர்ந்து எல்லோரும் ஒன்று சேர்ந்து உங்கள் விஜய்யை எதிர்க்கின்றனர்.
திமுகயையும், பாஜகவையும் நம்பாதீங்க. திமுகவுக்கோ, மற்றும் சிலர் கூட்டணிக்கோ ஓட்டு போட்டாலும் சரி. அது யாருக்கு செல்லும் என்பதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். இதில் உங்களுக்கு எவ்வித சந்தேகமும் வேண்டாம்.
கரூர் நிகழ்ச்சி சூழ்ச்சி என்று சொல்வதை போல நமது கடைசி படமான ஜனநாயகன் வெளிவந்தால், நமது மனதுக்கு நெருக்கமான நமது பூர்வ சொந்த பந்தங்களான நாம் நெஞ்சுக்கு நெருக்கமாகிவிடுவோம். நாம் நெருக்கமாகி தேர்தலில் மிகப்பெரிய ஆயுதமாக மாறிவிடுமோ என்பதற்காக ஒரு கூட்டு சூழ்ச்சி நடக்கிறது. உங்கள் விஜய் நான் கேட்கிறேன். உங்களுக்காக நீதி கேட்க வந்த எனக்கும்தான் நீதி வேண்டும்.
அவர்கள் கொள்ளை அடிக்க சிலரை இதுவரைக்கும் மக்களை ஏமாற்றி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலரை கையில் இல்லையில்லை, பணப்பையில் போட்டுகொண்டு சிறுபான்மை மக்களை ஏமாற்ற பாதி கதர் கூட்டணி, மற்றும் பலர் கூட்டணியின் டெல்லி ஓனரோடு ஒரு கொல்லைப்புற கள்ள கூட்டணி. பாதி காவி கூட்டணி. ஆனால் கொள்கை என்று நம்மை ஏமாறுகின்றனர்.
திமுகவையும், பாஜகவையும் நம்பாதீங்க. இவர்கள் இருவரும் வேறு வேறு கூட்டணி இல்லை. இவர்கள் ஒரே கூட்டணிதான். எனவே வரும் தேர்தலில் தவெகவுக்கு உங்களது ஆதரவை கொடுங்கள்.
உங்களுக்காக எனது வசதி வாய்ப்புகளை தூக்கி எறிந்துவிட்டு வந்துள்ளேன். நான்கு முனை, நாற்பது முனை போட்டி, எத்தனை முனை போட்டி வந்தாலும் இங்கு திமுகவுக்கும், தவெகவுக்கும் மட்டுமே போட்டி. மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுகவா, மக்களை நேசிக்கின்ற விஜய் வேண்டுமா என்பதுதான் இந்த தேர்தல். விசில் புரட்சி தேர்தலாக இருக்கவேண்டும்” என்று விஜய் பேசினார்.