

மதுரை: குடிநீர் கேட்டு கோரிக்கை வைத்தவர் மீது தாக்குதல் நடத்திய சட்டப்பேரவை துணைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் அரசு தரப்பில் ஆவணங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த கார்த்திக்குமார் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘துறையூர் சட்டப்பேரவை உறுப்பினரும், சட்டப்பேரவை துணைத் தலைவருமான ரவிசங்கரிடம் எங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி கோரி மனு அளிக்கச் சென்றேன். அப்போது என்னை தகாத வார்த்தைகளால் திட்டி, உருட்டுக் கட்டளையால் தாக்கினார்.
இதில் காயமடைந்த நான் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். மருத்துவமனை காவலர்களிடம் பேரவைத் துணைத் தலைவர் தாக்கியதாக தெரிவித்தபோதிலும், அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதாக வழக்கு பதிவு செய்தனர்.
மருத்துவமனையில் இருந்த என்னை மணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் கட்டாயப்படுத்தி பேரவை துணைத் தலைவர் வீட்டுக்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்து ‘என்னை யாரும் தாக்கவில்லை’ என வீடியோ பதிவிடுமாறு கூறினார். அதற்கு மறுத்த என்னை பேரவை துணைத் தலைவர் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, என் குடும்பத்தினர் மீது பொய் வழக்கு போடுவதாகவும் மிரட்டினார்.
இதனால், அச்சமடைந்து அவர்கள் கூறியபடி வீடியோவில் பேசினேன். இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பேரவை துணைத் தலைவர் ரவிசங்கர், மணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் கிருபாநிதி ஆகியோர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க திருச்சி எஸ்.பி.க்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி திலகவதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை டிச.1-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.