

மதுரை: மத்திய அரசு வழங்கும் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத்தை உயர்த்த கோரிய மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தஞ்சாவூர் கும்பகோணத்தைச் சேர்ந்த சுந்தர விமலநாதன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘இந்திரா காந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம், தற்போது தேசிய சமூகநல ஓய்வூதியத் திட்டம் என பெயர் மாற்றம் செய்து அமல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
இந்த ஓய்வூதியம் மிகக் குறைவாகவே உள்ளது. இது தற்போதைய வாழவாதாரத்துக்கான செலவு, தற்போதைய பணவீக்கம், விலை உயர்வு, மருத்துவச் செலவு, போக்குவரத்துச் செலவு ஆகியவற்றின் அடிப்படையில் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
மேலும், பொருளாதார நிலைக்கு ஏற்ப ஓய்வூதியத் தொகையை அவ்வப்போது மாற்றியமைக்கவும், தகுதியுள்ள அனைத்துப் பயனாளிகளுக்கும் சட்டப்படி, சரியான நேரத்தில் மற்றும் தடையின்றி ஓய்வூதியம் வழங்க போதுமான நிதி ஒதுக்கீடு செய்யவும் உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனுவை நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வின் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓய்வூதியத்தை உயர்த்துமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது, என கூறிய நீதிபதிகளை மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.