

மதுரை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராடியவர்கள் மீதான வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அத்துடன், வெறும் உருவ பொம்மையை எரிப்பது மட்டுமே இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகாது என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
திருச்சி மாவட்ட தமுமுக மாவட்ட பொருளாளர் ராஜா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் வழங்கக் கோரி கடந்த 2018-ல் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் போராட்டம் நடத்தப்பட்டது.
இப்போராட்டத்தால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும் நான் உட்பட 7 பேர் மீது திருச்சி கண்டோன்மென்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி ஆர்.விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், ஜனநாயக அடிப்படையில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் கடுமையான சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடிப்படை உரிமைகளுக்கு போராடும் மக்கள் மீது இது போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யக்கூடாது என ஏற்கனவே பல்வேறு உத்தரவுகள் உள்ளன எனக் கூறப்பட்டது.
அரசு தரப்பில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக உருவ பொம்மைகள் எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். வழக்கை ரத்து செய்யக் கூடாது எனக் கூறப்பட்டது.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் சாட்சிகள் அனைவரும் காவல் துறை அதிகாரிகளாக உள்ளனர்.
பொதுமக்கள் யாரும் சாட்சியாகக் காட்டப்படவில்லை. மனுதாரர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர் என்றோ அல்லது பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தனர் என்றோ எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லை.
இது ஒரு ஜனநாயக முறையிலான போராட்டமாகும். வெறும் உருவ பொம்மையை எரிப்பது மட்டுமே இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகாது.
எனவே, மனுதாரர்களுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடர்வது சட்டத்தின் செயல்முறையைத் துஷ்பிரயோகம் செய்வதற்கு மட்டுமே வழிவகுக்கும். எனவே, வழக்கு ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.