சென்னை: முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு நெருக்கமானவர் என கூறி, தனியார் பள்ளிகளிடம் ரூ. 100 கோடிக்கு மேல் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக தொடர்ந்த வழக்கில், தனியார் பள்ளிகள் சங்க பொருளாளரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி மற்றும் சிஎம்டிஏ அங்கீகாரம் உள்ளிட்ட பிற சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்றுத் தருவதாக கூறி, தமிழகம் முழுவதும் பல தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து ரூ.100 கோடிக்குமேல் வசூலித்து மோசடி செய்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரான பி.டி.அரசகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இவ்வழக்கில், பி.டி.அரசகுமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க பொருளாளரான முத்துக்குமார், முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
இவ்வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தனக்கு நெருக்கமானவர் என கூறி, இந்த மோசடி அரங்கேறியுள்ளது.
இது தொடர்பாக 47 பள்ளிகளின் நிர்வாகிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆயிரம் பள்ளிகளிடம், ரூ.100 கோடிக்குமேல் வசூலித்துள்ளனர். எனவே,மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிடப்பட்டது.
மனுதாரர் தரப்பில், மனுதாரருக்கு முன்னாள் அமைச்சருடனோ, தமிழக அரசுடனோ எந்த தொடர்பும் இல்லை. எனவே, முன்ஜாமீன் வழங்க வேண்டும் என கோரப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.