ராஜஸ்தானில் சென்னை போலீஸார் மீது வழக்குப் பதிவு: விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டிஜிபி உத்தரவு

ராஜஸ்தானில் சென்னை போலீஸார் மீது வழக்குப் பதிவு: விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டிஜிபி உத்தரவு
Updated on
1 min read

யானைக்கவுனி நகை திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட ராஜஸ்தான் நகைக் கடை உரிமையாளர் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக, சென்னை போலீஸார் மீது ராஜஸ்தான் காவல்துறை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்துள்ளது சம்பவம் குறித்து, விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு, சென்னை காவல் ஆணையருக்கு, தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, யானைக்கவுனி என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள ஒரு நகைக்கடையில் கடந்த மாதம் 2 கிலோ தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக யானைக்கவுனி குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில், கடையில் வேலை பார்த்த ராஜஸ்தானைச் சேர்ந்த சக்தி சிங் (26) மற்றும் அவரது கூட்டாளி லட்சுமணன் சிங் (27) ஆகியோர் திருடியது சிசிடிவி மூலம் உறுதியானது.

தனிப்படை போலீஸார் ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்துக்கு விரைந்து சென்று லட்சுமணன் சிங்கை கைது செய்தனர். அவரிடமிருந்து 60 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட் டது. லட்சுமணன் சிங்கின் செல்போனை ஆய்வு செய்த போது, அவர் ராஜஸ்தானில் 'கே.கே. ஜுவல்லர்ஸ்' என்ற கடையை நடத்தி வரும் வர்தா ராம் குர்ஜர் என்பவருக்குப் பலமுறை ஆன்லைன் மூலம் பணம் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், வர்தா ராம் ஏற்கெனவே சென்னையில் 750 கிராம் தங்கக் காசுகள் திருடிய வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளி வந்தவர் என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து, மீண்டும் விசாரணைக்காக ராஜஸ்தான் சென்ற சென்னை தனிப்படை காவலர்கள் பாக்ரி காவல் நிலையத்தில் வர்தா ராமிடம் விசாரணை நடத்தினர். அதில் போலீஸாருடன் வந்த தொழிலதிபர் மகாவீர் மேத்தா மற்றும் அவரது ஆட்கள் வர்தா ராமைத் தொடர்பு கொண்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. ஒரு கிலோ தங்கம் தரவில்லை என்றால், உன்னைக் கொலை செய்து பொய் வழக்கில் உள்ளே தள்ளுவோம் என்று மிரட்டியதாகத் தெரிகிறது.

இதனால், மனமுடைந்த வர்தா ராம், தனது சகோதரருக்கு ஒரு வாட்ஸ்- அப் ஆடியோவை அனுப்பிவிட்டு விஷம் அருந்தினார். அவரைத் தடுக்க முயன்ற சகோதரர் புத்தா ராமும் விஷம் குடித்தார். ஜோத் பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலை யில், சிகிச்சை பலனின்றி வர்தா ராம் உயிரிழந்தார். இச்சம் பவத்தால் ஆத்திரமடைந்த வர் தாராமின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உயிரிழந்தவரின் மனைவி கிரண் தேவி அளித்த புகாரின் பேரில், 5 பேர் மீது தற் கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ராஜஸ்தான் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து விரிவான விசாரணை நடத்தி, முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை காவல் ஆணையருக்கு, தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) உத்தரவிட்டுள்ளார்.

ராஜஸ்தானில் சென்னை போலீஸார் மீது வழக்குப் பதிவு: விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டிஜிபி உத்தரவு
Lubber Pandhu: யசோதா, துர்கா காட்டும் ‘கெத்து’ம் அன்பும் | திரை தேவதைகள் 16

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in