

சென்னை: கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் ஒன்பது பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து காவல்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகேயுள்ள தொட்டகாஜனூரில் அமைந்துள்ள பண்ணை வீட்டில் தங்கியிருந்த கன்னட நடிகர் ராஜ்குமாரை, 2000-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி வீரப்பன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் கடத்திச் சென்றனர். இதையடுத்து, ராஜ்குமாரை விடுவிக்கக் கோரி வீரப்பனிடம் பேச்சுவார்த்தை நடத்த தமிழக - கர்நாடக அரசுகள் இரண்டு குழுக்களை காட்டுக்குள் அனுப்பியது.
பலகட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு 108 நாள்கள் பிணைக் கைதியாக வைக்கப்பட்டிருந்த பின்னர் ராஜ்குமார் விடுவிக்கப்பட்டார். இந்தக் கடத்தல் வழக்கில் வீரப்பன் உட்பட அவருடைய கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா, மல்லு, ரமேஷ், கோவிந்தராஜ், அன்றில், பசுவண்ணா, புட்டுசாமி, கல்மண்டி ராமன், மாரன், செல்வன், அமிர்தலிங்கம், நாகராஜ் ஆகியோர் மீது ஈரோடு மாவட்டம், தாளவாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணையில் சம்பந்தப்பட்டவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு கோபிச்செட்டிபாளையம் 3-வது அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே 2004-ம் ஆண்டு வீரப்பன் மற்றும் அவருடைய கூட்டாளிகளான சேத்துக்குளி கோவிந்தன் மற்றும் சந்திரகவுடா ஆகிய மூவரும் போலீஸாரின் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
விசாரணையின்போது வழக்கில் தொடர்புடைய மல்லு இறந்துவிட, ரமேஷ் தலைமறைவானார். மீதமுள்ள 9 பேர் 18 ஆண்டுகளாக கோபிச்செட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கை எதிர்கொண்டு வந்தனர். இந்த வழக்கில் கடந்த 2018 ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. வழக்கில் தொடர்புடைய வீரப்பன் கூட்டாளிகளான கோவிந்தராஜ் , அன்றில், பசுவண்ணா, புட்டுசாமி , கல்மண்டிராமன், மாறன் , செல்வம், அமிர்தலிங்கம், நாகராஜ் ஆகிய 9 பேரையும் விடுதலை செய்து நீதிபதி மணி தீர்ப்பளித்தார்.
‘‘இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும், வீரப்பனுக்கும் எந்தவிதமான தொடர்பு இருந்தது என்பதை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. கன்னட நடிகர் ராஜ்குமார் மற்றும் அவருடைய மனைவி பர்வதம்மாள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படவில்லை. தூதுவர்களாகக் காட்டுக்குள் சென்றவர்களிடமும் போலீஸார் விசாரிக்கவில்லை. தகுந்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாததால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் 9 பேரும் விடுதலை செய்யப்படுகிறார்கள்’’ என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் வேல்முருகன், ஜோதி ராமன் அமர்வு முன்பு நடைபெற்றது. இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், விடுதலை செய்து விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்வதாகவும், காவல்துறையின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாகவும் தீர்ப்பளித்தனர்.