

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி 4-வது முறையாக போட்டியிடுகிறார். தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப். 23-ம் தேதி நடைபெறுகிறது.
அதிமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டு கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று அறிவித்தார். முன்னதாக அதிமுக சார்பில் போட்டியிடும் 23 பேர் கொண்ட முதற்கட்ட பட்டியலை அதிமுக தலைமை கழகம் நேற்று காலை வெளியிட்டது.
அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 3 தொகுதிகளில் அதிமுகவும், ஒரு தொகுதியில் அமமுகவும் போட்டியிடுகின்றன. இதில், ஜோலார்பேட்டை தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி 4-வது முறையாக போட்டியிடுகிறார். அதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது.
தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு ஜோலார்பேட்டை தொகுதியின் முதல் வேட்பாளராக கே.சி.வீரமணி அதிமுக சார்பில் போட்டியிட்டார்.
தொடர்ந்து 2 முறை வெற்றிபெற்ற கே.சி.வீரமணி கடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் தேவராஜியிடம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த இடையப்பட்டி காந்திரோடு பகுதியைச் சேர்ந்த சின்னராசு - மணியம்மாள் தம்பதியின் மகன் கே.சி.வீரமணி(62). பி.ஏ.வரலாறு படித்த இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி மேகலை. 2-வது மனைவி பத்மானி. இவர், 7 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இவர்களுக்கு அகல்யா (26), யாழினி (21) என்ற 2 மகள்களும், இனியவன்(22) என்ற மகனும் உள்ளனர்.
விவசாய குடும்பத்தைச் சேர்ந்த கே.சி.வீரமணி கடந்த 1993-ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார்.
அதிமுக கிளை செயலாளர், ஒன்றியச்செயலாளர், மாவட்ட துணைத்தலைவர், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் என பல்வேறு பொறுப்புகள் வகித்து 2006 முதல் தற்போது வரை மாவட்டச்செயலாளராகவும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அதிமுகவில் அதிகாரம் மிக்கவராகவும் கே.சி.வீரமணி உள்ளார்.
கடந்த 2001-ல் ஜோலார்பேட்டை ஒன்றியத்தலைவராகவும், 2011 மற்றும் 2016-ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராகவும், சுகாதாரம், பள்ளி கல்வி, இளைஞர் விளையாட்டு நலன், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சராக பதவி வகித்தார்.
4-வது முறையாக ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கே.சி.வீரமணி இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றிபெற்று ஆக வேண்டும் என்ற கணக்கில் பல அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார். அதேநேரத்தில், இவரை எதிர்த்து திமுக சார்பில் களம் காணும் வேட்பாளரை வெற்றிபெற செய்து இந்த முறையும் திமுகவின் கோட்டையாக ஜோலார்பேட்டைதொகுதியை மாற்ற வேண்டும் என்ற முனைப்பில் திமுகவினர் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.