

கோவில்பட்டி: கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கடம்பூர் செ.ராஜு 4-வது முறையாக களம் காண்கிறார். அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் மற்றும் அமைப்புச் செயலாளரான, முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு (66), கோவில்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளராக 4-வது முறையாக போட்டியிடுகிறார்.
கோவில்பட்டி தொகுதிக்கு உட்பட்ட கடம்பூர் கே.சிதம்பராபுரத்தில் அதிமுக கிளைச் செயலாளராக கட்சியில் பணியை தொடங்கிய கடம்பூர் செ.ராஜூ. மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளராக இருந்தார். தற்போது, வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர், அமைப்பு செயலாளர், சட்டப்பேரவை எதிர்க்கட்சி பொருளாளராக இருக்கிறார்.
2011-ம் ஆண்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கோ.ராமச்சந்திரனை 26,480 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2016-ம் ஆண்டு திமுக வேட்பாளர் அ.சுப்பிரமணியனை விட428 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை 12,403 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
தொடர்ந்து 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சராக பணியாற்றினார். கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சர் பதவி பெற்ற முதல் நபர் இவரே. தற்போதைய தேர்தலிலும் அதிமுக வேட்பாளராக இவரையே கட்சித் தலைமை அறிவித்துள்ளது.