

சென்னை: 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. தாம்பரத்தில் பணம் கைப்பற்றப்பட்ட நிலையில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன், அவரது தொகுதி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த விவாகரம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜகவின் முன்னாள் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக்கோரி மாநிலங்களவை திமுக உறுப்பினர் கிரி ராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் மீது சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் இது தொடர்பாக மூல வழக்குப் பதிவு செய்தும் இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்யவில்லை என்று மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஆரம்பகட்ட விசாரணை நடத்துவது கட்டாயமானது என்பதால் வழக்குப் பதிவு செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நயினார் நாகேந்திரனும், கேசவ விநாயகமும் பாஜகவை சேர்ந்தவர்களாக இருப்பதால் இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.