

பழனிசாமி ஒரேயடியாக அதிமுக வழியை அடைத்துப் பூட்டிவிட்டதால், ஓபிஎஸ்ஸை திமுக பக்கம் வண்டியைத் திருப்பச் சொல்லி அவரது ஆதரவாளர்கள் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.
“அதிமுக-வில் இணைய நான் தயாராக இருக்கிறேன்... பழனிசாமி தயாரா?” என ஓபிஎஸ் கேட்ட பிறகும் அவரை பழனிசாமி அதிமுக-வில் சேர்க்க மறுப்பதன் பின்னணியில் தென் மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகளும் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய தென் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சிலர், ‘‘கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை தவறவிட்டதற்கு தென் மாவட்டங்களில் அதிமுக-வுக்கு ஏற்பட்ட ஒரு சரிவும் முக்கியக் காரணம். கட்சிக்குள் அப்போது நிலவிய ‘நீயா நானா’ சண்டையில் இபிஎஸ் மீண்டும் முதலமைச்சர் ஆகிவிடக் கூடாது என்பதில் ஓபிஎஸ் தரப்பில் சிலர் தீவிரமாக இருந்தார்கள். அதனால், அவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்ட தென் மாவட்ட தொகுதிகளில் ஏனோ தானோ என தேர்தல் பணிகளை மேற்கொண்டார்கள். இபிஎஸ்ஸுக்கு ஆதரவான குறிப்பிட்ட சிலரை தோற்கடிப்பதற்காக உள்ளடி வேலைகளையும் பார்த்தார்கள். ஆனால், அதையும் மீறி அவர்கள் வெற்றிபெற்றார்கள். இருப்பினும் இபிஎஸ் மீண்டும் முதல்வராக வரமுடியவில்லை.
இதையெல்லாம் மனதில் வைத்துத்தான், தேர்தல் முடிந்ததுமே தென் மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் இருவர், ஒற்றைத் தலைமையாக இபிஎஸ் வரவேண்டும் என்ற கோஷத்தை முதல் குரலாக எழுப்பினார்கள். அதன் பிறகு ஓபிஎஸ் எப்படி ஓரங்கட்டப் பட்டார் என்பது ஊருக்கே தெரியும். ஆக, இப்போது இபிஎஸ்ஸே நினைத்தாலும் தென் மாவட்டத்தில் இருக்கும் நிர்வாகிகள் சிலர் ஓபிஎஸ்ஸை மீண்டும் உள்ளே கொண்டுவர விடுவதாய் இல்லை” என்றனர்.
ஓபிஎஸ் ஆதரவாளர்களோ, ‘‘என்ன பண்றதுன்னே தெரியல. பழனிசாமி கட்சிக்குள் சேர்க்க முடியாது என்று சொன்ன பிறகு, அடுத்து என்ன செய்வது என மாவட்ட வாரியாக விசுவாசிகளிடம் கருத்துக் கேட்டு வருகிறோம். திமுக-வுக்குச் செல்வதா, தவெக பக்கம் போவதா அல்லது அந்த இரண்டில் ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதா என பலவிதமான ஆலோசனைகள் நடக்கிறது.
தவெக-வில் சேர்ந்தாலோ அல்லது அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டாலோ அதிமுக தோற்க காரணமாக இருப்போமே தவிர, அதனால் நமக்கு எந்தப் பலனும் இருக்காது என பெரும்பாலான நிர்வாகிகள் ஓபிஎஸ்ஸிடம் கருத்துச் சொல்லி இருக்கிறோம். அதற்குப் பதிலாக, திமுக-வில் இணைந்தால் உங்களுக்கு அமைச்சர் பதவி கிடைப்பதுடன் ஆதரவாளர்கள் சிலருக்கு எம்எல்ஏ ஆகும் வாய்ப்பும் கிடைக்கும் என்று அவருக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறோம். இனிமேல் இறுதி முடிவு எடுக்க வேண்டியது ஓபிஎஸ் தான்” என்றனர்.