

புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி 42 நாட்களுக்கு பிறகு அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக 3 அமைச்சர்கள் பதவியேற்றனர்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மே 13-ம் தேதி முதல்வராக ரங்கசாமி, அமைச்சர்களாக பாஜகவை சேர்ந்த நமச்சிவாயம், என்ஆர் காங்கிரஸைச் சேர்ந்த மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் பதவியேற்றனர்.
இந்நிலையிவ் பாஜகவை சேர்ந்த ஜி.என்.எஸ்.ராஜசேகர், என்ஆர் காங்கிரஸைச் சேர்ந்த சிவக்கொழுந்து, ராஜவேலு ஆகியோரை அமைச்சர்களாக பரிந்துரை செய்து, அதற்கான கோப்பை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனிடம் முதல்வர் ரங்கசாமி ஜூன் 3-ம் தேதி வழங்கினார். மத்திய உள்துறைக்கு அனுப்பப்பட்ட இந்த கோப்புக்கு குடியரசுத் தலைவர் ஜூன் 8-ம் தேதி முறைப்படி ஒப்புதல் அளித்தார்.
இதையடுத்து புதுச்சேரி பழைய துணைநிலை ஆளுநர் மாளிகையில் நேற்று (ஜூன் 17) காலை நடந்த அமைச்சரவை விரிவாக்க நிகழ்வில், புதிய அமைச்சர்களாக ஜி.என்.எஸ்.ராஜசேகர், என்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிவக்கொழுந்து, ராஜவேலு ஆகியோருக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் முதலாவதாக வந்தே மாதரமும், தொடர்ந்து தேசிய கீதமும், இறுதியாக தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டன. பதவியேற்பு நிகழ்ச்சியில் என்டிஏ கூட்டணியிலுள்ள லஜக தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பங்கேற்கவில்லை. அமைச்சர்கள் பதவியேற்றாலும் இதுவரை எந்த அமைச்சருக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை. நேற்று பொறுப்பேற்ற புதிய அமைச்சர்களை, சட்டப்பேரவைக்கு வளாகத்தில் உள்ள அவரவர் அறைகளில் உள்ள இருக்கைகளில் அமர வைக்கப்பட்டனர்,
அப்போது முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, “விரைவில் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்படும். பேரவைத் தலைவர் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும். பேரவைத் தலைவர் பதவி என்ஆர் காங்கிரஸுக்கா, பாஜகவுக்கா என்பது அதை கொடுக்கும்போது தெரியும்” என்றார்.