

சென்னை: விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தை போக்குவரத்துத் துறை செயலர் இல.நிர்மல் ராஜ் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, ஆயுத பூஜை தொடர் விடுமுறை மற்றும் தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை நாட்களில் மேற்கொள்ள வேண்டிய சிறப்புப் பேருந்துகள் இயக்கம் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கிளாம்பாக்கத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.
பின்னர் போக்குவரத்துத் துறை செயலர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தை பார்வையிட்டு, பல்வேறு ஊர்களுக்கு செல்லக்கூடிய பயணிகளுக்கு உரிய பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டோம்.
ஆயுத பூஜை தொடர் விடுமுறை மற்றும் தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை நாட்களுக்கு தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பது குறித்தும், பேருந்துகளை எந்ததெந்த இடத்திலிருந்து இயக்குவது என்பது குறித்தும், போக்குவரத்து நெரிசல் மற்றும் பயணிகளுக்கு எவ்வித இடையூறு இன்றி சீரான போக்குவரத்தை உறுதி செய்திடவும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
இதன் பின்னர் எங்கள் பரிந்துரைகளை போக்குவரத்துத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு தெரிவித்து, உரிய முடிவுகள் எடுக்கப்படும். கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்து எதுவும் காலதாமதமாக இயக்கப்படவில்லை, சரியான நேரத்தில் இயக்கப்பட்டன.
பயணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளில் ஏறி உடனே பேருந்துகளை இயக்க வேண்டும் என்கின்றனர். குறித்த நேரத்தில்தான் பேருந்துகளை இயக்க முடியும். இந்த பிரச்சினையை தடுக்க பேருந்துகளில் புறப்படும் நேரத்தை குறிப்பிடுமாறு ஓட்டுநர், நடத்துநருக்கு அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.