‘புதுச்சேரியில் இருந்து தமிழகத்துக்குள் 90 மிலி மதுபானம் எடுத்து வந்தாலும் குற்றம்தான்’

கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் தகவல்
‘புதுச்சேரியில் இருந்து தமிழகத்துக்குள் 90 மிலி மதுபானம் எடுத்து வந்தாலும் குற்றம்தான்’
Updated on
1 min read

கடலூர்: புதுச்சேரியில் இருந்து 90 மிலி மதுபானம் எடுத்து வந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்ட போலீஸார் சில மாதங்களுக்கு முன் புதுச்சேரி - தமிழக எல்லையில் உள்ள சோதனை சாவடியில் காட்டு மயிலூரைச் சேர்ந்த வல்லரசு என்பவரின் வாகனத்தை சோதனையிட்டனர். அப்போது அவரிடமிருந்து புதுச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்ட 1 லிட்டர் 680 மிலி எடையளவு கொண்ட 3 மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வல்லரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம். நிர்மல்குமார் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம். பாலாஜி, தனிநபரின் சொந்த பயன்பாட்டுக்காக 4.5 லிட்டர் மதுபானம் வைத்துக் கொள்ள அனுமதியளித்து தமிழக அரசு கடந்த 2017-ல் அரசாணை பிறப்பித்துள்ளது. எனவே மனுதாரர் தனது சொந்த உபயோகத்துக்காக 1 லிட்டர் 680 மில்லி மதுபானம் வைத்திருந்தது சட்டவிரோதமானது அல்ல. எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

தனிநபர்கள் தங்களது சொந்த பயன்பாட்டுக்காக 4.5 லிட்டர் மதுபானம் வைத்துக் கொள்ளலாம் என தமிழக அரசின் விதிகள் அனுமதிக்கும் நிலையில், மனுதாரர் மீது வழக்குப் பதிவு செய்தது ஏற்புடையதல்ல என்று கூறி வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்துள்ளது. மேலும், ‘டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற வளாகங்களில் விற்கப்படும் மதுபானம் மற்றும் முறையாக அங்கீகரிக்கப்பட்ட பீர் மற்றும் ஒயின் பிராண்டுகளுக்கு மட்டுமே இது பொருந்தும்.

பிற மாநில மதுபானங்கள் மற்றும் மாநில அரசால் அறிக்கை, பிராண்ட் அறிமுக அரசாணை, இறக்குமதி அனுமதிகள் மூலம் குறிப்பிடப்படாத அத்தகைய மதுபானங்களை, அதிகபட்ச வரம்பான 4.5 லிட்டர், 7.8 லிட்டர் பீர் அல்லது 9 லிட்டர் ஒயின் ஆகியவற்றை தனிப்பட்ட நுகர்வு அல்லது விற்பனைக்காக வைத்திருப்பது, தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் பிரிவு 4(1)(சி) மற்றும் 14-இன் கீழ் ஒரு குற்றமாகும்.

எனவே, புதுச்சேரியில் இருந்து 90 மிலி மதுபாட்டில் எடுத்து வந்தாலும் அது குற்றமே. அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கடலூர் மாவட்ட மதுவிலக்கு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

‘புதுச்சேரியில் இருந்து தமிழகத்துக்குள் 90 மிலி மதுபானம் எடுத்து வந்தாலும் குற்றம்தான்’
ஊட்டி அருகே தாயை பிரிந்த புலிக்குட்டி மீட்பு - மற்றொரு குட்டியை தேடும் வனத்துறை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in