ஊட்டி அருகே தாயை பிரிந்த புலிக்குட்டி மீட்பு - மற்றொரு குட்டியை தேடும் வனத்துறை

ஊட்டி அருகே தாயை பிரிந்த புலிக்குட்டி மீட்பு - மற்றொரு குட்டியை தேடும் வனத்துறை
Updated on
1 min read

ஊட்டி: ஊட்டி அருகே தாயை பிரிந்து இரண்டு புலிக்குட்டிகள் தவித்துக் கொண்டிருந்தன. நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு ஒரு குட்டியை வனத்துறையினர் நீண்ட நிலையில் மற்றொரு குட்டியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதை ஒட்டி உள்ள மசினகுடி, கூடலூர் மற்றும் நீலகிரி வனக்கோட்டங்கள், முக்குறுத்தி தேசிய பூங்கா ஆகியவை புலிகளின் முக்கிய வாழ்விடங்களாக அமைந்துள்ளன. இந்த இடங்கள் அனைத்தும் புலிகள் வாழ்வதற்கான சூழலை கொண்டுள்ளதாலும், வனத்துறை மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மூலமாகவும் கடந்த சில சில ஆண்டுகளாக புலிகள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

கடந்த 7 ஆண்டில் மட்டும் புலிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. 2018ம் ஆண்டு 34 புலிகள் இருந்த நிலையில் 2024ம் ஆண்டு 63 ஆக அதிகரித்தது. புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக வாழ்விட சண்டை, வேட்டை உட்பட பல்வேறு காரணங்களால் ஒருபுறம் புலிகளின் எண்ணிக்கை குறைந்தும் வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டு ஆறு குட்டிகள் உட்பட, 10 புலிகள் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காரணங்களால் இறந்தன. இதைத் தொடர்ந்து புலிகளை பாதுகாக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நீலகிரி வனக்கோட்டம் ஊட்டி வடக்கு வன சரகம், ஆரம்பி பிரிவு, முத்திநாடு காப்பு காட்டின் எல்லையில் உள்ளது சோலாடா என்ற கிராமம். இந்த கிராமத்தில் இரண்டு புலிக்குட்டிகள் சுற்றி வருவதை அப்பகுதி மக்கள் கண்டறிந்தனர்.

உடனடியாக இது குறித்து அந்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் சரகர் ராம்பிரகாஷ் தலைமையில் வன ஊழியர்கள் அந்த கிராமத்துக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு ஒரு புலிக்குட்டி சுற்றித்திரிவதை கண்டனர். பின்னர், அப்புலிக்குட்டியை கூண்டு வைத்து பிடித்த வன பணியாளர்கள், அதற்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து சரகர் ராம்பிரகாஷ் கூறும் போது, ‘சோலாடா கிராமத்தில் தாயை பிரிந்து புலிக்குட்டி சுற்றித்திரிவதாக கிடைத்த தகவலின் அங்கு ஆய்வு செய்தோம். அங்கு சுமார் நான்கு முதல் ஐந்து மாதங்கள் ஆன பெண் புலி குட்டி இருந்தது. அந்த புலிக்குட்டி பிடிக்கப்பட்டு, கால்நடை மருத்துவரின் முழு கண்காணிப்பில் உள்ளது. அங்கு ஒரு குட்டி தான் இருந்ததா, வேறு குட்டிகள், தாய் புலி உள்ளதா என்பதை வன ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பிடிபட்ட புலிக்குட்டியை பராமரித்து உயர் அதிகாரியின் உத்தரவின் பேரில் விரைவில் வனப்பகுதியில் விடப்படும்’ என்றார்.

ஊட்டி அருகே தாயை பிரிந்த புலிக்குட்டி மீட்பு - மற்றொரு குட்டியை தேடும் வனத்துறை
முதுகலை படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் - சென்னை பல்கலை. அழைப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in