“தவெக அரசை மைனாரிட்டியாகவே வைத்திருக்க பாஜக விரும்புகிறது” - ரவிக்குமார் எம்.பி

“தவெக அரசை மைனாரிட்டியாகவே வைத்திருக்க பாஜக விரும்புகிறது” - ரவிக்குமார் எம்.பி
Updated on: 
2 min read

புதுச்சேரி: “தவெக மெஜாரிட்டி அரசாக மாறிவிடக் கூடாது. அப்படி மாறினால் அதனுடைய எதிர்ப்பு இன்னும் வலுப்படும் என்பதால்தான் மைனாரிட்டியாகவே வைத்திருக்க பாஜக விரும்புகிறது” என விசிக எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

எஸ்ஐஆர் நடவடிக்கைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுச்சேரி அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

இதற்கு முதன்மைச் செயலாளர் அரிமாத்தமிழன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி கண்டன உரையாற்றினார். கட்சியினர் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரவிக்குமார் எம்.பி, “தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், இரண்டு தேர்தல் ஆணையர்களின் ஒப்புதல் இல்லாமல் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை அறிவித்து சட்டத்துக்கு புறம்பான மாற்றங்களை செய்தது என எல்லாவற்றையும் அவர்கள் எதிர்த்திருக்கிறார்கள்.

இது எல்லாமே இன்றைக்கு சட்ட விரோதமான நடவடிக்கைகளாக தெரிய வந்திருக்கிறது. அரசியல் அமைப்பு சட்ட குழப்ப நிலை உருவாகி இருக்கிறது. இது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து திட்டமிட இண்டியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் நாளை டெல்லியில் நடக்க உள்ளது. அதில் எங்கள் தலைவரும், நானும் பங்கேற்கின்றோம்.

வாக்குரிமை என்பதை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக ஆக்க வேண்டும். இப்போது அரசியலமைப்பு சட்ட உரிமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறது. 13 கோடி வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டிருப்பது, வாக்குரிமை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக இல்லாத காரணத்தால் தான்.

ஸ்டாலின், அரவிந்த் கேஜ்ரிவால், மம்தா பானர்ஜி ஆகியோரின் தோல்விக்கு பின்னால் எஸ்.ஐ.ஆர். இருக்கிறதோ, இல்லையோ, ஆனால் எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு நடத்தப்பட்ட தமிழகம், மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில் இருந்த அரசுகள் வீழ்த்தப்பட்டதற்கு எஸ்.ஐ.ஆர் காரணமாக இருக்கிறது என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

தவெக அமைச்சர் ராஜ்மோகன், தேர்தல் ஆணையரை மட்டும் பதவி விலக சொல்வது பிரச்சினையை திசை திருப்புவதாக ஆகிவிடும் என்று சொல்லியுள்ளார். கரப்பான்பூச்சி ஜனதா கட்சி கூட போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். ஒருவேளை ராஜ்மோகன் அதைப்பற்றி சொல்லியிருக்கலாம்.

இண்டியா கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு நாளை அறிவிக்கப்படும். அதற்கு பிறகு தவெகவும் ஆதரவான நிலையை எடுக்கும்.

தவெக அரசு மைனாரிட்டி அரசாக இருக்கிறது. மெஜாரிட்டி அரசுகளாக இருந்த மேற்கு வங்கம், கேரளம், தமிழகம் போன்ற மாநிலங்களில் அந்த அரசுகளை பாஜகவினர் என்ன பாடுபடுத்தினர் என்பது தெரியும்.

ஆளுநர்களை வைத்தும், கொடுக்க வேண்டிய நிதியை மறுத்தும் அலைக்கழித்தார்கள். எனவே மைனாரிட்டி அரசாக இருக்கும்போது நீக்குபோக்காகத்தான் நடந்துகொள்ள முடியும். தவெக மற்ற 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.

ஆனால், பாஜகவினுடைய தேர்தல் ஆணையம் அதை நடத்த மறுக்கிறார்கள். உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். இதற்கு காரணம் தவெக மெஜாரிட்டி அரசாக மாறிவிடக் கூடாது. அப்படி மாறினால் அதனுடைய எதிர்ப்பு இன்னும் வலுப்படும் என்பதால் தான் மைனாரிட்டியாகவே வைத்திருக்க பாஜக விரும்புகிறது.

தவெக அரசை பொறுத்தவரையில் அவர்கள் செய்யும் அறிவிப்புகளுக்கு எதிர்கட்சிகள், மக்களின் எதிர்ப்பு வந்தால் அதனை திரும்பபெற்றுக்கொள்கின்றனர். அதில் அவர்கள் கவுரவம் பார்ப்பதில்லை. தலைமை செயலகம் கட்டும் முடிவில் அவர்கள் மக்களுக்கு விரோதமான முடிவை எடுக்க மாட்டார்கள்.

மதுராந்தகம் இடைத்தேர்தலில் வரும் 1-ம் தேதி தவெக, விசிக, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடக்கிறது.

யாராக இருந்தாலும் கண்ணியத்தோடு பொதுக்கூட்ட மேடைகள், தேர்தல் பிரச்சாரங்களில் பேசுவது அவசியம். இன்றைக்கு கைதட்டல்கள் வருகிறது என்பதற்காக பேச ஆரம்பித்தால் அரசியல் சூழலே சீர்கெட்டு போய்விடும். இதை எல்லா தலைவர்களுமே உணர வேண்டும்.

இண்டியா கூட்டணியில் திமுக இல்லை. ஆகவே அவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்கு வாய்ப்பு இல்லை. நிச்சயம் இந்த நடவடிக்கையை எதிரான நிலையைத்தான் எடுப்பார்கள்” என்று அவர் தெரிவித்தார்.

“தவெக அரசை மைனாரிட்டியாகவே வைத்திருக்க பாஜக விரும்புகிறது” - ரவிக்குமார் எம்.பி
“பிரதமர் வேட்பாளர் குறித்து இப்போது பேசுவது ஏற்புடையது அல்ல” - திருமாவளவன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in