“பிரதமர் வேட்பாளர் குறித்து இப்போது பேசுவது ஏற்புடையது அல்ல” - திருமாவளவன்

திருமாவளவன்

திருமாவளவன்

Updated on: 
2 min read

பெரம்பலூர்: “தற்போதைய அரசியல் சூழ்நிலையில் விஜய் பிரதமர் வேட்பாளர் என்று பேசுவது ஏற்புடையது அல்ல. அதற்கான நேரம் வரும்போது யார் வேட்பாளர் என்பது தெரியவரும்” என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. ஆட்சியர் அப்துல் ராசிக் தலைமையில் நடந்த கூட்டத்தில், பெரம்பலூர் எம்பி அருண் நேரு, சிதம்பரம் தொகுதி எம்பியும், விசிகவின் தலைவருமான தொல் திருமாவளவன், எம்எல்ஏ சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள விக்சித் பாரத், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, தூய்மை பாரத இயக்கம் உள்பட 58 திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. முடிக்கப்பட்ட திட்டங்கள், நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. நிறைவடையாத பணிகளை துரிதமாக முடிக்க அதிகாரிகளுக்கு எம்.பி அருண் நேரு உத்தரவிட்டார்.

கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில், “பெரம்பலூர் மாவட்டத்தில் வீட்டுமனை பட்டா கிடைப்பதில் சிரமம் உள்ளது. விண்ணப்பித்தவர்களுக்கு சரியாக வீட்டுமனை பட்டா கிடைத்துள்ளதா? இதுவரை எவ்வளவு பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது, நிலுவையில் உள்ள பட்டாக்கள். ஏற்கெனவே வீட்டுமனை பட்டா வாங்கியவர்கள், அந்த இடங்களில் குடியிருக்க முடிகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

இதேபோல வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் காவல் துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும். இதுவரை எவ்வளவு போக்சோ வழக்குகள் பதிவாகி உள்ளது. தீர்வு காணப்பட்ட வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த தகவல்களை பரிமாற வேண்டும். பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள். இதை தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து பேச வேண்டும்.

அதேபோல பெரம்பலூரில் கல்குவாரிகள் அதிகளவு செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரிகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்ய வேண்டும். அரியலூரில் சுண்ணாம்பு தொழிற்சாலையால் குடிநீர் மாசுபடுவதுடன், பொது மக்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது.

அதேபோல பெரம்பலூரிலும் கல்குவாரி துகள்கள் மற்றும் நச்சு காற்றால் பொதுமக்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறதா என்பது குறித்து கண்காணிப்பு குழு கூட்டங்களில் விவாதிக்க வேண்டும். சிறுநீரக பாதிப்புகள் இருந்தால், அதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதைத் தொடர்ந்து பிரதமர் வேட்பாளராக விஜய் பேசப்படுவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “அரசியலில் யார் வேண்டுமானாலும், முதல்வர், பிரதமர் ஆவதற்கு ஆசைப்படலாம். விஜய் பிரதமர் வேட்பாளர் என்று அவரது கட்சி தொண்டர்கள் கூறி வருகின்றனர். அதிகாரபூர்வமாக யாரும் இன்னும் அறிவிக்கவில்லை. தற்போதைய காலக்கட்டத்துக்கு பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து பேச்சு ஏற்புடையது அல்ல. அதற்கென்று காலம், நேரம் உள்ளது. அப்போது யார் பிரதமர் வேட்பாளர் என்பது தெரியவரும்” என்றார்.

<div class="paragraphs"><p>திருமாவளவன் </p></div>
மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் தரிசனம்: கோயில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in