“அதிமுகவை விமர்சிக்க விஜய்க்கு தகுதியில்லை” - நயினார் நாகேந்திரன் ஆவேசம்

“அதிமுகவை விமர்சிக்க விஜய்க்கு தகுதியில்லை” - நயினார் நாகேந்திரன் ஆவேசம்
Updated on
2 min read

மதுரை: ‘அதிமுகவை விமர்சிக்க விஜய்க்கு தகுதியில்லை’ என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆவேசமாக கூறியுள்ளார்.

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 2-வது தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் பிப்.28-ல் நடைபெறுகிறது. இதற்காக மதுரை மண்டேலா நகரில் எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்ற இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். கடந்த தேர்தலில் 525 வாக்குறுதிகளை திமுக அளித்தது. அதில் 70 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. ஆனால், மத்திய அரசு எதையும் செய்யவில்லை என தொடர்ந்து கோயபல்ஸ் பிரச்சாரம் செய்து வரும் திமுகவை விரட்டி அடிக்க வேண்டும்.

5 மாதங்களுக்கு முன்பு பாஜக கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேறுவதாகவும், திமுக கூட்டணி வலுவாக இருப்பதாகவும் கூறினார்கள். திமுக கூட்டணியில் காங்கிரஸ் மந்திரி பதவி கேட்கிறதா? ராகுலை கனிமொழி சந்தித்தது ஏன் என்பதை முதல்வர் ஸ்டாலினிடம் யாரும் கேட்பதில்லை.

காங்கிரஸ் கட்சியில் பூத் கமிட்டி அமைக்கக் கூட யாரும் இல்லை என திமுக எம்எல்ஏ பேசியுள்ளார். இதுபற்றி முதல்வரிடம் யாரும் கேட்கவில்லை. எங்கள் கூட்டணியில் சிறிதாக எது நடந்தாலும் பூதாகரமாக பேசுகிறார்கள்.

தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன. போலீஸார் உடன் பணிபுரியும் பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். ஆட்சி முடியும் நேரத்தில், அடுத்து ஆட்சிக்கு வர முடியாத நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை எப்படி நிறைவேற்ற முடியும் என்பதை யாரும் கேட்பதில்லை. பாஜகவிடம்தான் நிறைய கேள்வி கேட்கிறீர்கள். ஸ்டாலினிடம், செல்பெருந்தகையிடம் யாரும் கேட்பதில்லை.

பிரதமர் முன்னெழுப்பில் 23 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஐநா சபைக்கு போனாலும், அயோத்திக்கு போனாலும் தமிழ் பேசுவதை பார்க்கலாம். தமிழக பட்ஜெட்டில் திருப்பரங்குன்றத்துக்கு தனியாக நிதி ஒதுக்குவதில்லை. அதுபோல்தான் மத்திய பட்ஜெட்டில் மொத்தமாக நிதி ஒதுக்கப்படும். பின்னர் அனைத்து மாநிலங்களுக்கும் பிரித்து கொடுக்கப்படும்.

பழனிசாமி முதல்வராக இருந்தபோது 11 மருத்துவக் கல்லூரி வந்தது. ஸ்டாலின் ஒரு மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தாரா? கேட்டால் டப்பா இன்ஜின் என்கிறார்கள். தமிழகத்தில் நடைபெறுவது கஞ்சா இன்ஜினா?

மதுரை மட்டும் குப்பையாக இல்லை. தமிழ்நாடே குப்பையாக உள்ளது. காங்கிரஸ் கட்சியால் தனியாக போட்டியிட முடியுமா? விஜய் கூட போக எவ்வளவோ பேச்சுவார்த்தை நடத்தியது காங்கிரஸ். முடியாமல் போனதால் திமுக கூட்டணியில் உள்ளது. எங்கள் கூட்டணி பொருந்தும் கூட்டணி. திமுக கூட்டணி பொருந்தா கூட்டணி.

அதிமுகவை விமர்சிக்க விஜய்க்கு ஒரு தகுதியும் இல்லை. ஒரு கவுன்சிலர் கூட ஆகவில்லை. இன்னும் விசில் அடித்துக்கொண்டிருந்தால் ஒன்றும் நடக்காது.

ராகுல் காந்தி கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது. தமிழை வைத்து பிச்சை கூட எடுக்க முடியாது என ஒருவர் பேசியதாகத்தான் நிதியமைச்சர் நிர்மலா பேசினார். அது அவரது கருத்து கிடையாது. கமல்ஹாசனுக்கு இது தெரியவில்லை” என்று அவர் கூறினார்.

“அதிமுகவை விமர்சிக்க விஜய்க்கு தகுதியில்லை” - நயினார் நாகேந்திரன் ஆவேசம்
கூட்டணி விவகாரத்தில் தொடரும் தமிழக காங்கிரஸ் தலைவர்களின் மல்லுக்கட்டு... ‘முடிவு’ என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in