

சென்னை: ‘கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்’ என பாஜக தேசிய செயலாளர் ம.வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹானூர் வனப் பகுதியில், கடந்த 15-ம் தேதி 3 தமிழர்கள் அம்மாநில வனத்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.
அதில், 3 பேரின் உடல்களில் காயங்கள் இருந்ததாகவும், 10 அடிக்கும் குறைவான நெருக்கத்தில் நின்று ‘பம்ப் ஆக் ஷன் ஷாட் கன்’ மூலம் அவர்கள் சுடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
கர்நாடக வனத்துறையினரால் நிகழ்த்தப்பட்ட இந்தப் படுகொலையில் மர்மம் இருப்பதாக, சம்பவம் நடந்தபோதே தமிழக பாஜக பல கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில், தற்போது வந்துள்ள பிரேதப் பரிசோதனை அறிக்கையும் இது ஒரு போலி என்கவுன்ட்டர் என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
கர்நாடக அரசு கூறுவதைப்போல படுகொலை செய்யப்பட்ட 3 பேரும் சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டிருந்ததாக ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும்கூட, அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில்தான் ஆஜர்படுத்தியிருக்க வேண்டும்.
அதை விட்டுவிட்டு போலி என் கவுன்ட்டர் செய்தது மனித உரிமை மீறல். இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தப்படுவதை தவெக அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.