

சனி சிங்கணாபூர்: மகாராஷ்டிராவின் அகில்யாநகர் (முன்னர் அகமதுநகர்) மாவட்டத்தில் உள்ள சனி சிங்கணாபூர் கிராம மக்கள் வீடுகளுக்குப் பூட்டுகளோ, கதவுகளோ இன்றி வாழ்ந்து உலகையே வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர்.
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு, கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பானஸ்நாலா நதிக்கரையில் பெரிய கருங்கல் சிலை ஒன்று ஒதுங்கியது. உள்ளூர்வாசி ஒருவர் அந்த 1.5 மீட்டர் நீள சிலையை குச்சியால் தொட்டபோது, அதிலிருந்து ரத்தம் வழிந்ததாக நம்பப்படுகிறது. அன்றிரவே கிராமத் தலைவரின் கனவில் தோன்றிய சனி பகவான், அந்தச் சிலை தன் உருவமே என்றும், தன்னைக் கூரையின்றி வைக்குமாறும் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
கிராமத்தை பாதுகாப்பதாக அவர் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், அந்த சிலை திறந்த மேடையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாட்டு மையமானது. இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே, திருடும் எவரும் தெய்வீக தண்டனைக்கு உள்ளாவார்கள் என்ற எண்ணம் தலைமுறை தலைமுறையாக வேரூன்றியுள்ளது. திருடர்கள் பார்வையிழப்பது, ஏழரை ஆண்டுகள் சனி தோஷத்தால் அவதிப்படுவது போன்ற நம்பிக்கைகள் இன்றும் நிலவுகின்றன.
இதன் விளைவாக, பெரும்பாலான வீடுகளுக்கு நிரந்தர கதவுகளோ பூட்டுகளோ இல்லாமல், விலங்குகளைத் தடுக்க மட்டும் மரப் பலகைகள் பயன்படுத்தப்படுகின்றன. கிராமவாசிகளின் இந்த வழக்கம், அங்கு இயங்கிய அரசு நிறுவனங்களுக்கும் விரிவடைந்தது. 2015-ல் திறக்கப்பட்ட காவல் நிலையத்துக்கும் வழக்கமான முன் கதவு இல்லை.
2011-ல், யுனைடெட் கமர்ஷியல் வங்கி தற்போதைய யூகோ வங்கி, கண்ணாடிக் கதவு மற்றும் ரிமோட் கட்டுப்பாட்டிலான மின்-காந்தப் பூட்டு தொழில்நுட்பத்துடன், இந்தியாவின் முதல் பூட்டில்லா கிளையை இங்கு தொடங்கியது. இருப்பினும், தெய்வ நம்பிக்கை என்பது திருட்டு நிகழாது என்பதற்கு உத்தரவாதம் அல்ல என்பதையும் நிகழ்வுகள் நிரூபித்துள்ளன.
2010-ல் ஒரு பயணியின் வாகனத்திலிருந்து ரூ.35,000 மதிப்புள்ள பணமும் நகைகளும், 2011-ல் ரூ.70,000 மதிப்புள்ள தங்க நகைகளும் திருடு போனதாக செய்திகள் வெளியாயின. காலத்தின் மாற்றத்தால் இன்றைக்குக் கண்காணிப்பு கேமராக்களும், பாதுகாப்பு அரண்களும் பயன்பாட்டுக்கு வந்துவிட்ட போதிலும், சனி சிங்கணாபூரின் ‘பூட்டற்ற கிராமம்’ என்ற பெருமை பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையின் அடையாளமாக இன்னமும் தொடர்கிறது.