

ராமநாதபுரம்: வளர்ச்சியைப் பற்றி கவலைப்படாமல் ஊழலில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழகத்தை திமுக அரசு மாற்றியுள்ளதாக பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் குற்றம்சாட்டியுள்ளார்.
ராமநாதபுரத்தில் பாஜக வேட்பாளர் ஜிபிஎஸ்கே. நாகேந்திரனை ஆதரித்து அரண்மனை அருகே நடைபெற்ற கூட்டத்தில் நிதின் நபின் பேசியதாவது: திமுக, காங்கிரஸ் ஊழல் செய்து தொடர்ந்து தமிழகத்தை ஏழ்மை நிலைக்குக் கொண்டு செல்கிறது.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமைந்ததும் போதை கலாச்சாரம் அடியோடு ஒழிக்கப்படும். அளவுக்கதிமாக சைபர் குற்றங்கள் நடக்கின்றன. ஐஎஸ்ஐ மூலம் தீவிரவாதம் வளர்க்கப்படுகிறது.
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற தமிழக அரசு அனுமதிக்கவில்லை. திமுக அரசு வளர்ச்சியைப் பற்றி கவலைப்படவில்லை. ஊழலில் நம்பர் ஒன் மாநிலமாக மாற்றிக் கொண்டிருக்கிறது.
கருணாநிதி, ஸ்டாலின் என ஒரு குடும்பத்துக்காக மட்டும் இந்த அரசு பாடுபட்டுக்கொண்டிருக்கிறது. இந்த குடும்ப ஆட்சியை ஒழிக்க வேண்டும். காசியை போல் ராமேசுவரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு செய்துள்ளனர்.
ஈரானில் தவித்த ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்களை பிரதமர் மீட்டுள்ளார்.
பெண்கள், விவசாயிகள், மீனவர்கள் என அனைத்துத் தரப்பினருக்கான அரசு அமைய தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களியுங்கள். இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், நடிகர் சரத்குமார், மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாவட்ட தலைவர் முரளிதரன், வேட்பாளர் ஜிபிஎஸ்.கே.நாகேந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.