

பரமக்குடி: திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டியா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரமக்குடியில் நேற்று ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
முன்னதாக நேற்று காலை பரமக்குடியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட அவர், காந்தி சிலை, பெரிய பஜார், மீன் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து வாக்குச் சேகரித்தார்.
அவரிடம் பலர் புத்தகங்களை வழங்கி செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அப்போது, செய்தியாளர்களிடம் முதல்வர் கூறியதாவது: தோல்வி அடையப்போவதால் பழனிசாமி விரக்தியில் இருக்கிறார்.
அதனால்தான் திமுக தலைவர்கள் பற்றி அவதூறாகப் பேசுகிறார். தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும்தான் போட்டி என்று நான் தெரிவித்து வருவதற்குகாரணமே, அதிமுகவின் முகமூடி போட்டுத்தானே பாஜக உள்ளே வருகிறது.
அதனால்தான் அப்படி கூறுகிறேன். தமிழக அரசின் தலைமைச் செயலரை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதைக் கண்டித்து அறிக்கை அளித்துள்ளேன்.
தேர்தல் ஆணையத்திடம் டி..ஆர்.பாலு புகார் மனு அளித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார். திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையேதான் போட்டி என்று விஜய் சொல்லி வரும் நிலையில், அவர் நடித்த ஜனநாயகன் படக் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளதே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘அதைப் பற்றி கருத்துக் கூற விருப்பமில்லை’ என்று பதில் அளித்தார்.