பிசியோதெரபிஸ்டிடம் ஜிபே மூலம் பணம் பெற்று நூதன மோசடி: சென்னையில் இருவர் கைது

Updated on
1 min read

சென்னை: பிசியோதெரபிஸ்டிடம் ஜிபே மூலம் பணம் பெற்று நூதன பண மோசடியில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை கோவூர் ஈஸ்வரன் நகரைச் சேர்ந்தவர் அப்பு (25). தனியார் மருத்துவமனை ஒன்றில் பிசியோதெரபிஸ்டாக வேலை செய்து வருகிறார். கடந்த ஜூன் 8-ம் தேதி மதியம் அசோக் நகர் 19-வது அவென்யூ அருகே உள்ள வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்துக் கொண்டு வெளியே வந்தார். அப்போது ஏடிஎம் மையத்துக்கு வந்த 2 இளைஞர்கள், தங்களது ஏடிஎம் கார்டு வேலை செய்யவில்லை என்றும், அவசரமாக ரொக்கப் பணம் தேவைப்படுவதாகவும் கூறினர்.

மேலும், ரூ.1,500 கொடுத்தால் உடனடியாக ஜிபே மூலம் பணத்தை அனுப்பி விடுவதாக தெரிவித்தனர். இதை நம்பி, இரக்கப்பட்டு அப்பு, அவர்களிடம் ரூ.1,500 கொடுத்தார். பின்னர் அவர்கள் அப்புவின் கியூ.ஆர். கோடை ஸ்கேன் செய்து, செல்போனில் பணம் அனுப்பியதற்கான சத்தம் வந்ததாக கூறிவிட்டு, பைக்கில் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இதையடுத்து தனது வங்கிக் கணக்கை சரிபார்த்தபோது, அந்த இளைஞர்கள் பணம் அனுப்பாமல் ஏமாற்றியது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அப்பு இது தொடர்பாக கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

இதில், இந்த நூதன மோசடியில் ஈடுபட்டது கோடம்பாக்கம் சூளைமேடு நெடுஞ்சாலைப் பகுதியைச் சேர்ந்த ஷாஜித் (21), அதேபகுதி கோபாலமேனன் தெருவைச் சேர்ந்த திருச்செல்வம் (19) என்பது தெரிந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

விசாரணையில், இவர்கள் இதே பாணியில் கோடம்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கம் பகுதிகளில் மேலும் 2 பேரை ஏமாற்றி பணம் பறித்திருப்பதும், ஷாஜித் மீது ஏற்கெனவே 2 குற்ற வழக்குகளும், திருச்செல்வம் மீது 4 குற்ற வழக்குகளும் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

பிசியோதெரபிஸ்டிடம் ஜிபே மூலம் பணம் பெற்று நூதன மோசடி: சென்னையில் இருவர் கைது
“பயிர்க் கடன்களை நிபந்தனையின்றி தள்ளுபடி செய்க” - ஆர்ப்பாட்டத்தில் வளர்மதி வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in