

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 1 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் 11.24 சதவீத வாக்குகளைப் பெற்ற பாஜக தற்போது, அதில் கால்வாசியை எட்டியதே கடினமாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று 4 தொகுதிகளில் வென்ற பாஜக, அதன்பின்னர் அண்ணாமலை தலைமை பொறுப்பை ஏற்றவுடன் படு வேகமெடுத்து செயல்பட்டது. நாங்களே உண்மையான எதிர்க்கட்சி என செயல்பட்ட பாஜக, 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக அல்லாத தனி அணியை கட்டமைத்தது.
பாமக, அமமுக, ஓபிஎஸ் போன்றோரை கூட்டணியில் சேர்த்துக்கொண்டு 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக அணி 18.28 சதவீத வாக்குகளைப் பெற்றது. இதில் பாஜகவின் வாக்குகள் மட்டுமே 11.24 சதவீதம். இதனை அடிப்படையாக கொண்டே அதிமுக கூட்டணியில் அதிகளவில் தொகுதிகளை எதிர்பார்த்து ஆதிக்கம் செலுத்திய பாஜக, இறுதியில் 27 இடங்களை பெற்றுக்கொண்டது.
அதிமுகவுடனான தொகுதிப் பங்கீடு முடிந்தவுடனேயே, வெற்றி வாய்ப்பில்லாத தொகுதிகளை நயினார் நாகேந்திரன் பெற்றுள்ளார் என்ற விமர்சனமும் பாஜகவில் ஒரு தரப்பினரால் முன்வைக்கப்பட்டது. இதன் காரணமாக இந்த முறை தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டார் அண்ணாமலை. ஆனாலும், நயினார் நாகேந்திரன், எல்.முருகன், தமிழிசை, ராம.சீனிவாசன் என முக்கிய தலைவர்கள் பலரும் தேர்தலில் போட்டியிட்டனர்.
தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அனைவருக்கும் ஷாக் கொடுத்து தவெக முதன்மை கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக இம்முறை படுதோல்வியை சந்தித்துள்ளது. கடந்த 2021 தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4-ல் வென்ற பாஜக, இம்முறை 27 தொகுதிகளில் போட்டியிட்டு உதகமண்டலம் தொகுதியில் மட்டும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இம்முறை அடித்த தவெக சூறாவளியில் பல கட்சிகளும் தவிடுபொடியாகியுள்ளன. குறிப்பாக, அதில் பாஜக பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. கட்சி தொடங்கியது முதலே பாஜகவை கொள்கை எதிரி என விஜய் தொடர்ந்து விமர்சித்து வந்தார். கரூர் சம்பவத்துக்கு பின்னர் சிபிஐ விசாரணை வளையத்துக்குள் வந்தவுடன், பாஜக பெயரை குறிப்பிட்டு விமர்சிப்பதை தவிர்த்து வந்தார் விஜய். இந்தச் சூழலில் தான், சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தாக்கத்தால் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது.
2 சதவீத வாக்கில் இருந்து 11 சதவீதத்தை எட்டிவிட்டோம், தேசிய அளவில் முதன்மை கட்சியாக உள்ளோம் என்ற நம்பிக்கையோடு இருந்த பாஜக, இம்முறை பிரதமர் மோடியையும் அழைத்துவந்து பல இடங்களில் பிரச்சாரம் செய்தது. ஆனாலும், அதனையெல்லாம் தாண்டியில் விஜய்யின் அலையில் சிக்கி பாஜக சின்னாபின்னமாகியுள்ளது.
முக்கியமாக அக்கட்சி கடந்த முறை வென்ற நாகர்கோவில், மொடக்குறிச்சி தொகுதிகளில் இம்முறை தோல்வியை சந்தித்துள்ளது. அதேபோல கோவை வடக்கில் போட்டியிட்ட வானதி சீனிவாசனும் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். சாத்தூரில் நயினார் நாகேந்திரனும் தோல்வியடைந்துள்ளார்.
2026 தேர்தலில் 14.60 லட்சம் வாக்குகளைப் பெற்று 2.98 சதவீத வாக்குகளை மட்டுமே பாஜக பெற்றுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் பெற்ற 11 சதவீதத்துடன் ஒப்பிடும்போது இது தலைகீழான வீழ்ச்சியாகும். இதனை பாஜக எப்படி எதிர்கொள்ளும் என்று பார்ப்போம்.