

திருப்பூர்: அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியில் திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி, பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சி இத்தொகுதியில் பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ளது. இத்தொகுதியில் சிறுபான்மையினர் சமூக வாக்குகளை அறுவடை செய்வது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் அவிநாசி (தனி), திருப்பூர் தெற்கு ஆகிய இரு தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், அவிநாசி தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
திருப்பூர் தெற்கு தொகுதியில் பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் போட்டியிட உள்ளதாக அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. எனினும் அக்கட்சித் தலைமை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.
திருப்பூர் மாவட்டத்தில் குறைந்த வாக்காளர்களைக் கொண்டது திருப்பூர் தெற்கு தொகுதியாகும். கடந்த பிப்ரவரி 23-ம் தேதி வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி இத்தொகுதியில் 289 வாக்குச் சாவடிகள் உள்ளன.
94 ஆயிரத்து 579 ஆண் வாக்காளர்களும், 99 ஆயிரத்து 11 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 24 பேர் என மொத்தம் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 614 பேர் உள்ளனர்.
இந்தத் தொகுதியில் கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் க.செல்வராஜ், அதிமுக வேட்பாளரான சு.குண சேகரனைவிட 4,709 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதற்கு மிக முக்கியக் காரணம் சிறுபான்மையினர் வாக்குகள் திமுகவுக்கு விழுந்ததுதான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
தற்போதைய தேர்தலில் திமுக சார்பில் மேயர் என்.தினேஷ்குமார் இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார். எனினும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், பட்டியலின சமூகத்தினர், இஸ்லாமியர்கள் என பல்வேறு சமூகத்தினரும் அதிக அளவில் உள்ளனர்.
இந்தத் தொகுதியில் பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச் சார்ந்த ஜாப்ஒர்க் நிறுவனங்கள் அதிகம் உள்ளன. திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட பெரும்பாலான பகுதிகளைக் கொண்ட இந்தத் தொகுதியில் குப்பை பிரச்சினை, சொத்து வரி, தொழில் வரி, பாதாள சாக்கடை கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, மின் கட்டணம், நூல் விலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இந்தத் தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்பு உள்ளது.
அதே வேளையில், சிறுபான்மையினர் சமூகத்தின் வாக்குகளை முழுமையாக அறுவடை செய்யும் வேட்பாளரே இந்தத் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற கருத்தும் நிலவி வருகிறது. வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க உள்ள நிலையில் பாஜக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டால் களம் சூடுபிடிக்க வாய்ப்பு உள்ளது.
- ஆர்.தர்மலிங்கம்