

கோவை: “விஜய் குறித்த என் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் வேறு சித்தாந்தம். அவர்கள் வேறு சித்தாந்தம். இருப்பினும் அரசியல் கூட்டணிக்குள் முரண்பாடான கட்சிகள் உண்டு. பொது எதிரியை வீழ்த்த ஒன்று சேர்ந்தது உண்டு. தமிழகத்தில் திமுக ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம்” என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும், “கரூர் விவகாரத்தில் மடியில் கனமிருப்பதால் செந்தில் பாலாஜி சிபிஐ விசாரணைக்கு பதறுகிறார்” என்று அவர் கூறினார்.
அவர் இன்று கோவையில் செய்தியாளர்களிடம் கூறியது: “விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமிக்கு நடந்த கொடூர சம்பவத்துக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. புகார் தெரிவித்த உடனேயே, போலீஸார் விசாரித்து நடவடிக்கை எடுத்திருந்தால் சிறுமி உயிரிழப்பை தடுத்திருக்கலாம். இது காவல் துறையின் தோல்வி என்பதை விட, அத்துறையை நிர்வகிக்கும் முதல்வரின் முழு தோல்வியாகும். முதல்வர் வெட்கி தலை குனிய வேண்டும். ஆட்சியாளராக தோல்வியுற்றேன் என்பதை முதல்வர் ஒப்புக் கொள்ள வேண்டும்.
கேன் எடுத்துச் சென்று பெட்ரோல் பிடித்த நிலை தமிழ்நாட்டை தவிர, நாட்டில் வேறு எங்கேயும் நடக்கவில்லை. அதற்கு இங்குள்ள அரசியல்வாதிகள் பீதியை கிளப்பி விட்டதால், மக்களுக்கு பயம் வந்ததே காரணம். இந்த விவகாரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என பிரதமரே தெளிவுபடுத்திவிட்டார்.
நேச்சுரல் கேஸ் கன்ட்ரோல் ஆர்டர் 9-ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட பிறகு, எல்.பி.ஜி. உள்நாட்டு உற்பத்தி 28 சதவீதம் அதிகரித்துள்ளது. ஹார்முஸ் நீரிணை வழியாக 2 கப்பல்கள் இந்தியாவுக்கு வந்துள்ளது. இது வெளியுறவுத் துறையின் கொள்கைக்கு கிடைத்த வெற்றி. உலகம் முழுவதும் பெட்ரோல் விலை ஏற்றப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் எந்த பிரச்சினையும் இல்லை.
நாடாளுமன்றத்தில் சம்பந்தமே இல்லாத பிரச்சினையை ராகுல் காந்தி எடுக்கிறார். நாடாளுமன்ற நுழைவாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தி நாடாளுமன்ற மாண்பை கெடுத்துள்ளனர்.
சட்டம் - ஒழுங்கு குற்றங்கள் குறித்த உள்துறை செயலாளர் அளித்த அறிக்கை தவறானது. திமுக அரசு அதிகாரிகளை தவறாக பயன்படுத்துகின்றனர்.
என்டிஏ கூட்டணியில் சேர விருப்பம் தெரிவித்து உள்ளனரா என நீங்கள் தவெக தலைவர், பொதுச் செயலாளரிடம் தான் கேட்ட வேண்டும். இன்றைய சூழலில் எங்களது கூட்டணி பலமாக உள்ளது. யாரையும் எதிர்பார்த்து, எங்கள் கூட்டணி இல்லை. நாங்கள் வலுவாக, பலமாக எங்களது பாதையில் செல்கிறோம்.
திமுக கூட்டணியில் விசிக, கம்யூனிஸ்ட்கள் அசமாதான நிலையில் உள்ளனர். திமுக கூட்டணிக்குள் சலசலப்புகள் எழுந்துள்ளன.
தமிழக அரசியல் களத்தில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் ட்விஸ்ட் இருக்கும். இந்த முறையும் அதை எதிர்பார்ப்போம். நாங்கள் எங்களது டைம் லைனில் சரியாக செல்கிறோம்.
கரூர் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கேட்டது தவெக. சிபிஐ அமைப்பை வைத்து தவெகவை பயமுறுத்துகின்றனர் என்பதை ஏற்க முடியாது. ஜனநாயகன் பட விவகாரம் தயாரிப்பு நிறுவனத்துக்கும், சான்றிதழ் வழங்கும் நிறுவனத்துக்கும் இடையே உள்ள பிரச்சினை.
முதல்வரின் கவனம் சட்டம் - ஒழுங்கு, தமிழக நலனில் இல்லை. ரீல்ஸ் போடும் முதல்வராக மாறிவிட்டார்.
கரூர் விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்கு செந்தில் பாலாஜியை அழைத்துள்ளனர். அவரை அழைத்து விசாரிக்க வேண்டியது சிபிஐ கடமை. சிபிஐ செந்தில் பாலாஜியை அழைப்பது சரியானது. அவர் மடியில் கனமிருப்பதால் பதறுகிறார். மடியில் கனம் இல்லை என்றால் சென்று பேச வேண்டியதுதானே. சிபிஐ விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைக்க வேண்டும்.
விஜய் குறித்த என் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் வேறு சித்தாந்தம். அவர்கள் வேறு சித்தாந்தம். இருப்பினும் அரசியல் கூட்டணிக்குள் முரண்பாடான கட்சிகள் உண்டு. பொது எதிரியை வீழ்த்த ஒன்று சேர்ந்தது உண்டு. தமிழகத்தில் திமுக ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம்.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர்தான் அரசு இயந்திரம் செயலிழந்து, குற்றங்கள் அதிகரித்துள்ளன. திமுக தலைவர்கள் எதையோ சாதித்தது போல், தேர்தலில் வெற்றி பெற்றது போல் உள்ளனர். இதுதான் அவர்களின் அழிவுக்கு அஸ்திவாரம். அவர்களின் ஆணவம், அகங்காரத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
முதல்வர் ஸ்டாலின் திமுக கூட்டங்களுக்கு தான் செல்கிறார். இன்னும் மக்களை சந்திக்கவில்லை. மக்களை சந்திக்க செல்லும்போது, மக்களின் எதிர்ப்பு முதல்வருக்கு தெரியவரும்.
கேரளாவில் காங்கிரஸ் கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர். அங்கு 2026 தேர்தலில் பாஜக பெரும் சக்தியாக வரும். தமிழகத்தில் பழனிசாமி முதல்வராக வர வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார். இன்றைய சூழலில், தமிழகத்துக்கு 2026-க்கான தேவை பழனிசாமி. எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் அவர். அவரை வெற்றி பெற வைக்க நாங்கள் பாடுபடுகிறோம்” என்று அவர் கூறினார்.