

பூர்ணசந்திரன் | மதுரையில் பூர்ண சந்திரனுக்கு இரங்கல் தெரிவித்து பாஜகவினர் ஒட்டிய போஸ்டர்.
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றக் கோரி தீக்குளித்து உயிரிழந்த பூர்ணசந்திரனின் உடலுக்கு பாஜக,
இந்து அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர். மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த பூர்ணசந்திரன் (40), தல்லாகுளம் புறக்காவல்நிலையத்துக்குள் புகுந்து தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
முன்னதாக, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றக்கோரி உயிரை மாய்த்துக் கொள்வதாகக் கூறி ஆடியோ வெளியிட்டிருந்தார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நேற்று அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
அரசு மருத்துவமனை பிணவறை பகுதியில் பாஜக, இந்து முன்னணி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தோர் ஆயிரக்கணக்கில் கூடினர்.
பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க போலீஸார் முயன்றனர். அப்போது அங்கு திரண்டிருந்தவர்கள், “நயினார் நாகேந்திரன், காடேஸ்வராசுப்பிரமணியன், அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்திய பிறகே, உடலைப் பெறுவதுகுறித்து முடிவெடுப்போம்” என்றனர்.
இதற்கிடையில், தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன், பாஜக மாவட்டத் தலைவர் மாரிசக்கரவர்த்தி தலைமையில் பாஜக, இந்து அமைப்புகளைச் சேர்ந்தோர் வாயில் கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு, அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையொட்டி, காவல் துணை ஆணையர்கள் அனிதா, ராஜேஸ்வரி, திருமலைக்குமார், எஸ்.பி. அரவிந்த் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
பின்னர், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், பாரதிய பார்வர்டு பிளாக் தலைவர் முருகன், அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் உள்ளிட்டோர் பூர்ணசந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மேலும், பூர்ணசந்திரனின் மனைவி இந்துமதி மற்றும் அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறி, ரூ.10 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினர். பின்னர் பூர்ணசந்திரன் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தத்தனேரி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது
ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். பூர்ண சந்திரனின் ஆன்மா சாந்தியடைய தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் இன்று மோட்ச தீபம் ஏற்றுமாறு பாஜக மற்றும் இந்து அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
பூர்ணசந்திரனின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பாஜக, இந்து முன்னணி சார்பில் ‘தீப தியாகிக்கு அஞ்சலி’ என்ற தலைப்பில் மதுரையில் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
தல்லாகுளம், எஸ்.எஸ். காலனி பகுதியில் போஸ்டர்களை ஒட்டிய பாஜக நிர்வாகி ராஜதுரை உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்து, போஸ்டர்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். சில இடங்களில் போஸ்டர்களை போலீஸார் கிழித்து அகற்றியதாக இந்து அமைப்பினர் குற்றம் சாட்டினர்.
உறவினர்கள் ஆவேசம்; அரசியல் தலைவர்கள் கண்டனம்: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி தற்கொலை செய்துகொண்ட பூர்ணசந்திரன், மானாமதுரை அருகேயுள்ள நெட்டூர் ஆலங்குளத்தைப் பூர்வீகமாக கொண்டவர். இவரது தந்தை பெரியசாமி டாஸ்மாக்கில் பொது மேலாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது வழக்கறிஞராக உள்ளார். இவரது மனைவி காளீஸ்வரி. உயிர்இழந்த பூர்ணசந்திரனுக்கு மனைவி இந்துமதி, மகன்கள் இனியன் (6) சிவநேசன் (3) உள்ளனர்.
பூர்ணசந்திரனின் தந்தை பெரியசாமி கூறும்போது, “பூர்ணசந்திரன் ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். முருகன் கோயிலுக்குச்செல்லும் பாதயாத்திரை குழுவை நடத்தி வந்தார். நீதிமன்றம் உத்தரவிட்டும் தீபம் ஏற்ற அரசு மறுக்கிறதே என்று அடிக்கடி என்னிடம் வருத்தப்பட்டு கூறி வந்தார். நாங்கள் மகனை இழந்து தவிக்கிறோம்” என்றார்.
பூர்ணசந்திரன் சித்தி மீனாட்சி மற்றும் உறவினர்கள் கூறும்போது, “திருவண்ணாமலையில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை அடிவாரத்தில் இருக்கும் அனைவரும் பார்ப்பதுபோல, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றினால் மதுரை மக்கள் அனை வரும் பார்க்கலாம் என அடிக்கடி பூர்ண சந்திரன் கூறி வந்தார்.
அவரது கனவு நிறைவேறவில்லை என்றால், நாங்களும் அதே முடிவை எடுப்போம். எங்களது குடும்பத்தினர் திமுகவைச் சேர்ந்தவர்கள். ஆனால், இதுவரை அமைச்சர், ஆட்சியர் மற்றும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த யாரும் வரவில்லை” என்றனர்.
அரசின் வீண் பிடிவாதம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், இந்து மக்கள்கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும்கூட, அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காகத் தீபம் ஏற்ற மறுத்து, திமுக அரசு வீண் பிடிவாதம் பிடிக்கிறது. தீக்குளித்து உயிரிழந்த பூர்ணசந்திரன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளனர்.