

சென்னை: வாரத்தில் 5 நாட்கள் வேலை என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளரும், வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளருமான சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது: கடந்த 2024 மார்ச்சில் கையெழுத்தான இருதரப்பு ஒப்பந்தத்தில், வாரத்தின் அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறையாக அறிவிக்க வங்கி நிர்வாகங்கள் சம்மதித்தன.
இதற்காக, திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி வேலை நேரத்தை வாடிக்கையாளர் சேவைக்காக 40 நிமிடங்கள் அதிகரிக்கவும் ஊழியர்கள் ஒப்புக்கொண்டனர். இந்த ஒப்பந்தம் மத்திய நிதி அமைச்சக ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு இரண்டரை ஆண்டுகள் ஆகியும் நிலுவையில் உள்ளது.
எனவே, வாரம் 5 நாட்கள் வேலைமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும். ஒப்புக்கொண்டபடி, அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும். இதுதவிர, புதிதாக பணிக்குச் சேர்ந்த ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
ஓய்வுபெற்ற மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியத் தொகையை தற்போதைய நிலவரத்துக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் தொகையை வங்கிகளே முழுமையாக ஏற்க வேண்டும். பணிக்கொடை உச்ச வரம்பை உயர்த்த வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் 11-ம் தேதி (இன்று) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் உட்பட 7 சங்கங்கள் பங்கேற்கின்றன. தமிழகத்தில் 60 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் 8 லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் கூறினர்.
நாளை (12-ம் தேதி) சனி, 13-ம் தேதி ஞாயிறு, 14-ம் தேதி விநாயகர் சதுர்த்தி ஆகிய 3 நாட்களும் அரசு விடுமுறை என்பதால் வங்கிகள் செயல்படாது. இதனால், வங்கி சேவை தொடர்ந்து 4 நாட்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.