52 கோயில்களில் அமலுக்கு வந்தது ‘செல்போன்’ தடை - பழநி முருகன் கோயிலில் தீவிர சோதனை

52 கோயில்களில் அமலுக்கு வந்தது ‘செல்போன்’ தடை - பழநி முருகன் கோயிலில் தீவிர சோதனை
Updated on
1 min read

திண்டுக்கல்: அறுபடை வீடுகள் உட்பட 52 முதுநிலைக் கோயில்களில் செல்போன் கொண்டு செல்வதற்கான தடை இன்று (செப்.1) முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், பழநி முருகன் கோயிலில் தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

திண்டுக்கல் மாவட்ட பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களில் சிலர் கோயில் வளாகத்துக்குள் புகைப்படம், வீடியோ, செல்ஃபி எடுப்பது, ரீல்ஸ் தயாரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதை தடுக்க, கடந்த 2023 அக்டோபர் 1-ம் தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதல் கட்டமாக அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் அறுபடை வீடுகள் உட்பட 52 முதுநிலைக் கோயில்களில் செல்போன் பயன்பாட்டுக்கான முழுமையான தடை இன்று (செப்.1) முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் செல்போன் எடுத்து செல்கின்றனரா? என படிப்பாதை, வின்ச் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் ‘லக்கேஜ் ஸ்கேனர்’ மற்றும் பணியாளர்கள் மூலம் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

விதிகளை மீறி எடுத்து சென்று பயன்படுத்தும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. பக்தர்கள் தங்கள் செல்போன்களை பாதுகாப்பாக வைக்க படிப்பாதை, ரோப் கார் நிலையம் மற்றும் வின்ச் ரயில் நிலையம் ஆகிய 3 இடங்களில் ஏற்கனவே செல்போன் வைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையங்களில் மொத்தம் உள்ள 14,000 ரேக்குகளில் ஒரு லட்சம் செல்போன்களை பாதுகாப்பாக வைக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. பழநி மலைக்கோயில், திருஆவினன்குடி கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள், தனியார் நிறுவன காவலாளிகள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் ஸ்மார்ட் போன் எடுத்து வரவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

52 கோயில்களில் அமலுக்கு வந்தது ‘செல்போன்’ தடை - பழநி முருகன் கோயிலில் தீவிர சோதனை
மேட்டூர் அணையை திறக்க வருகை தந்த முதல்வர் விஜய் - மக்கள் உற்சாக வரவேற்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in