

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஒட்டிய ஒரு கி.மீ. சுற்றளவுக்கு எந்த கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்கக்கூடாது என்ற பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து கிரெடாய் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கின் இறுதி விசாரணையை உயர் நீதிமன்றம் ஆக.3-க்கு தள்ளி வைத்துள்ளது.
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஒட்டிய ஒரு கி.மீ. சுற்றளவுக்கு எந்த கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்கக்கூடாது என தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கடந்தாண்டு செப்டம்பரில் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில் பள்ளிக்கரணையை சுற்றிலும் ஒரு கி.மீ. சுற்றளவுக்கு எந்த கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்கக்கூடாது என தடை விதித்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் கடந்தாண்டு அக்டோபரி்ல் உத்தரவிட்டது.
பசுமை தீர்ப்பாயம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வரைவு அறிக்கை
அப்போது கிரெடாய் தரப்பில், ‘‘பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியைச் சுற்றி சுமார் ஒரு கி.மீ. சுற்றளவுக்கு மெட்ரோ ரயில் மற்றும் 36 கல்லூரிகள், 11 மருத்துவமனைகள், ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன; அறிவியல் பூர்வமாக எந்தவொரு களஆய்வும் நடத்தாமல் ஒரு தனியார் அறக்கட்டளை அளித்த வரைவு அறிக்கையின் அடிப்படையில் பசுமை தீர்ப்பாயம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பசுமை தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவு காரணமாக அப்பகுதி நில உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பசுமை தீர்ப்பாயம் மற்றும் சிஎம்டிஏ பிறப்பித்துள்ள உத்தரவுகளை ரத்து செய்துவிட்டு அறிவியல் பூர்வமாக ஆய்வு நடத்தி, பள்ளிக்கரணை பகுதியில் கட்டுமானங்களுக்கு தடை விதிக்கும் பரப்பை மறு நிர்ணயம் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும், என வாதிடப்பட்டது.
தமிழக அரசு தரப்பில், பசுமை தீர்ப்பாயத்தின் தடை உத்தரவு காரணமாக பள்ளிக்கரணை பகுதியை சுற்றிலும் கட்டிட அனுமதி கோரி பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க இயலவில்லை.
ஏற்கெனவே பெறப்பட்ட 47 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் இறுதி விசாரணையை வரும் ஆக.3-க்கு தள்ளி வைத்துள்ளனர்.