குதிரை பேரம் விவகாரத்தில் கைதான 3 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

குதிரை பேரம் விவகாரத்தில் கைதான 3 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
Updated on
1 min read

சென்னை: தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக கைதான 3 பேரின் ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நரேஷ், ரமேஷ், கார்த்திக், திருநாவுக்கரசு உட்பட 9 பேரை சென்னை திருவல்லிக்கேணி போலீஸார் கைது செய்துள்ளனர்.

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் மீதும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

இந்நிலையில், கைதாகி நீதிமன்றக் காவலில் சிறையில் உள்ள நரேஷ், ரமேஷ், கார்த்திக் ஆகிய 3 பேரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

‘இந்த வழக்குக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் எங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று அதில் கோரியிருந்தனர்.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸார் தரப்பில், ‘இந்த வழக்கு ஆரம்பகட்டத்தில் உள்ளது. இந்த வழக்கில் இன்னும் பலருக்கு தொடர்பு உள்ளது. ஏற்கெனவே கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரித்துள்ள நிலையில், மனுதாரர்கள் 3 பேருக்கும் ஜாமீன் வழங்கினால், புலன் விசாரணை பாதிக்கப்படும்’ என்று வாதிடப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுதாரர்கள் 3 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

குதிரை பேரம் விவகாரத்தில் கைதான 3 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் ஜூலை 22 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in