

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெகவுக்கு வீசிய ஆதரவு அலை, திமுக, அதிமுக கூட்டணிக்குள் வெடித்த ஈகோ மோதல் போன்றவற்றால் காங்கிரஸ், தேமுதிக, விசிக, பாஜக, தமாகா ஆகிய கட்சிகள் படுதோல்வியை சந்தித்துள்ளன.
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்குமான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப். 23-ம் தேதி நடைபெற்றது. திமுக, அதிமுக, விஜய்யின் தவெக மற்றும் சீமானின் நாதக எனப் பலமுனைப் போட்டி நிலவியதில், ‘விஜய் அலையில்’ சிக்கி பல ஜாம்பவான்கள் சரிந்துள்ளனர்.
குறிப்பாக, திமுக, அதிமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, பாஜக, தமாகா ஆகிய கட்சிகள் படுதோல்வியைச் சந்தித்துள்ளன. இதுகுறித்து, விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: திமுக கூட்டணியில் 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், வெறும் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இத்தோல்விக்குச் சில முக்கியக் காரணங்கள் அடுக்கப்படுகின்றன. அதாவது, அதிக இடங்களைக் கேட்டு திமுகவை அதிருப்திக்குள்ளாக்கிய காங்கிரசுக்கு, வெற்றி வாய்ப்பே இல்லாத கடினமான சில தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
மேலும், வேட்பாளர் தேர்வில் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தன்னிச்சையாகச் செயல்பட்டதாக எழுந்த சர்ச்சை ஆகியவை ராகுல் காந்தி, ஸ்டாலின் கூட்டுப் பிரச்சாரம் ரத்து செய்யும் அளவுக்குச் சென்றது.
இதனால், காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் திமுகவினர் களப்பணியில் ஆர்வம் காட்டாததும் அக்கட்சியின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. இதேபோல், 8 தொகுதிகளில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இதற்கு, தொண்டர்களின் விருப்பத்திற்கு மாறாகக் குறைந்த தொகுதிகளை ஏற்றது, தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறிவிட்டுத் தலைவர் திருமாவளவன் பின்வாங்கியது, வேட்பாளர்கள் தேர்வில் சொதப்பியது போன்றவை அக்கட்சியினரிடையே தொய்வை ஏற்படுத்தியது.
சரியான வாக்காளர் ஒருங்கிணைப்பு இல்லாததும் விசிகவின் இந்தச் சறுக்கலுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. திமுக கூட்டணிக்குள் திடீரென நுழைந்து 10 தொகுதிகளைப் பெற்ற தேமுதிக, ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
ஸ்டாலினை மேடையில் வைத்துக் கொண்டே, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்துப் பேசியது மற்றும் திருமாவளவனை மரியாதைக் குறைவாக நடத்தியாக வெடித்த சர்ச்சை போன்றவை கூட்டணி கட்சியினரை ஆத்திரமடையச் செய்தது.
இதன் விளைவாக, கூட்டணிக் கட்சியினர் தேமுதிகவிற்குச் சரியாக வேலை செய்யவில்லை. அடிக்கடி கூட்டணி மாறும் அக்கட்சியின் முடிவும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், அக்கட்சிக்கு பெரும் தோல்வி ஏற்பட்டுள்ளது.
இதேபோல், அதிமுக கூட்டணியில் 26 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்று பெரும் அதிர்ச்சியைச் சந்தித்துள்ளது. பாஜக பலமாக உள்ள சென்னை, கோவை, கன்னியாகுமரி ஆகிய இடங்களைத் தராமல், அக்கட்சிக்கு வாக்கு வங்கியே இல்லாத திமுகவின் கோட்டைகளை பழனிசாமி ஒதுக்கினார்.
அண்ணாமலைக்கு எதிரான லாபியை நயினார் நாகேந்திரன், பழனிசாமியுடன் இணைந்து முன்னெடுத்தது மற்றும் டெல்லி வழங்கிய தேர்தல் நிதி கடைக்கோடித் தொண்டர்களைச் சென்றடையாதது பாஜகவின் தோல்வியை உறுதி செய்தது.
ஆரம்பம் முதல் 10 தொகுதிகளைக் கேட்ட ஜி.கே.வாசனுக்கு, அதிமுக வெறும் 5 இடங்களை மட்டுமே ஒதுக்கியது. அதுவும், ‘தாமரை’ சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையுடன்.
இதற்கு ஏற்கெனவே அதிமுக ஆதரவில் எம்பி சீட் பெற்றுவிட்டு, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாகச் செயல்பட்டதால் வாசன் மீது பழனிசாமி கடும் கோபத்தில் இருந்தார். இதனால், வாக்கு வங்கியே இல்லாத இடங்களை ஒதுக்கி வாசனைப் பழிவாங்கியது அதிமுக தலைமை.
இறுதியில் தமாகா ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் துடைத்தெறியப்பட்டது. தமிழக மக்கள் இந்தத் தேர்தலில் கூட்டணிக் கணக்குகளையும், பாரம்பரிய வாக்கு வங்கிகளையும் புறந்தள்ளிவிட்டு, ஒரு புதிய மாற்றத்தைத் தேர்வு செய்துள்ளனர்.
இதன் மூலம், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேசியக் கட்சிகளும், பிராந்தியக் கட்சிகளும் தமிழகத்தில் தங்கள் செல்வாக்கை இழந்து நிற்பது தெளிவாகியுள்ளது. அதேநேரத்தில் கூட்டணிக்குள் நிலவிய ஈகோ மோதலும் இந்த தோல்விக்கு மிகப்பெரிய காரணமாக இருப்பதையும் மறுக்க முடியாது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.