

எடப்பாடி பழனிசாமி
அதிமுகவில் தற்போது இலையுதிர் காலம் போல. முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என பலரும் வேகவேகமாக அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் ஐக்கியமாகி வருகின்றனர். அதிமுகவுக்கு என்னதான் ஆச்சு?
கட்டுக்கோப்பான இயக்கம் என பெயர் பெற்ற அதிமுக, 2016-ல் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தொடர்ந்து கலகலத்து போய்க் கொண்டே இருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் டிடிவி தினகரன், சசிகலா என பலரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு, ஒரு கட்டத்தில் அப்போதைய ஆட்சியும், கட்சியும் முழுமையாக எடப்பாடி பழனிசாமியின் கைவசம் வந்தது.
அப்போது கவிழும், இப்போது கவிழும் என எதிர்க்கட்சிகள் ஆரூடம் சொன்னாலும், ஆட்சியை 2021 வரை முழுமை செய்தார் பழனிசாமி. அதன்பிறகு திமுக வென்ற பின்னர், மீண்டும் அதிமுகவில் புயல் சுழல ஆரம்பித்தது. ஓபிஎஸ், செங்கோட்டையன் போன்றோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
ஓபிஎஸ் தனி கட்சி போல செயல்பட்டு பாஜக அணியில் சேர்ந்து மக்களவைத் தேர்தலை சந்தித்தார். அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக கூட இணைய தயார் என ஓபிஎஸ் தரப்பு கெஞ்சினாலும், பலனேதும் இல்லை. இதனையடுத்து ஓபிஎஸ் மற்றும் அவரின் அணியில் இருந்த வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் திமுகவுக்கு போனார்கள். அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என கோஷம் எழுப்பியதால் ஒதுக்கப்பட்ட செங்கோட்டையன், தவெகவில் இணைந்து இப்போது அமைச்சராகிவிட்டார்.
2021-ல் ஆட்சியை இழந்தாலும், 2026-ல் மீண்டும் ஆளும் கட்சியாகிவிடலாம் என கணக்குப் போட்டுதான் முன்னாள் அமைச்சர்கள் பலரும் அதிமுகவில் தொடர்ந்து பயணித்தனர். ஆனால், தமிழக அரசியலில் திடீர் தாக்கத்தை உருவாக்கிய தவெக ஆட்சியை பிடித்தது, திமுகவை விட அதிமுகவுக்கே அதிகம் ஷாக் கொடுத்தது.
ஏற்கெனவே ஆட்சியில் இல்லாததால் கடந்த 5 ஆண்டுகளாகவே, அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள்தான் எக்கச்சக்கமாக செலவு செய்து கட்சியை கரையேற்றி வந்தனர். இதனையெல்லாம் செலவாக பார்க்காமல், 2026 ஆட்சிக்கான முதலீடாகவே அவர்கள் பார்த்தனர். ஆனால், 2026-ல் ஆட்சி நமக்கில்லை என ஆனதும், இன்னும் 5 ஆண்டுகள் மூச்சைப் பிடித்து செலவு செய்து மல்லுக்கட்ட அவர்கள் தயார் இல்லை என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.
இதன் காரணமாகவே தவெக ஆட்சிக்கு ஆதரவு கொடுத்து, ஏதோ சில அமைச்சர்கள், வாரியங்கள், டெண்டர்களை கைப்பற்றி அடுத்த 5 ஆண்டுகளை கடத்துவோம் என திட்டம் போட்டது அதிமுகவின் ஒரு தரப்பு.
ஆனால், தவெகவுக்கு ஆதரவு கொடுத்துவிட்டால், பிறகு நிரந்தமாக 3-வது கட்சியாகி விடுவோம், முன்னுக்கு வர வாய்ப்பே இல்லை என்று அழுத்தமாக சொல்லிவிட்டார் பழனிசாமி. இடையில் திமுக - அதிமுக கூட்டணி பேச்சுகளும் ஓடியதாக ஒரு தரப்பு சொல்கிறது.
பழனிசாமி பக்கம் நின்றால், அடுத்த 5 ஆண்டுக்கும் கைக்காசை போட்டுத்தான் செலவு செய்ய வேண்டும். அப்படி செய்தாலும், 2031-ல் நாம் ஆட்சியை பிடிப்போம் என்பது நிச்சயமும் இல்லை என நினைக்கின்றனர் முக்கிய புள்ளிகள்.
இதனையெல்லாம் யோசித்தே, சட்டப்பேரவையில் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். நம்பிக்கை தீர்மானம் நிறைவேறும் வரை பாசிட்டிவாக பேசிய தவெக தரப்பு, அதன் பின்னர் தகுதி நீக்கம், குதிரை பேர குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு பதவி கொடுக்காமல் கிடப்பில் போட்டது.
பழனிசாமி தரப்பும் தகுதி நீக்க விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்ததால், வேறு வழியின்றி வேலுமணியின் தரப்பு சரண்டர் ஆனது. ஆனாலும், 4 அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் சேர்ந்தனர். இது மட்டுமின்றி கடம்பூர் ராஜு, எம்.சி.சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்துள்ளனர். மேலும், பல மாவட்ட, ஒன்றிய அதிமுக பொறுப்பாளர்களும் தவெகவுக்கு சாரை சாரையாக படையெடுத்துள்ளனர்.
தமிழக அரசியலில் விஜய் முழுமையாக கோலோச்சிவிட்டார், இன்னும் 10 – 15 ஆண்டுகளுக்கு அவரை அசைப்பது கடினம் என அதிமுகவிலிருந்து விலகியவர்கள் தரப்பு நம்புகிறது.
மேலும், அதிமுகவில் நாளுக்கு நாள் வெடிக்கும் உட்கட்சி மோதல்களில் சிக்கி அல்லல் படவும் விருப்பமில்லை என்கின்றனர். இதனைத் தொடர்ந்தே விலகல் படலங்கள் அதிமுகவில் தொடர்கதையாகிவிட்டது.
தவெக என்பது 95 சதவீதம் இளம் நிர்வாகிகளை கொண்ட கட்சியாக உள்ளது. எனவே இளையவர்கள் அதிகம் உள்ள கட்சியே இனி தவெகவுக்கு போட்டியாக இருக்க முடியும் என்ற சூழல் உருவாகி விட்டது. ஆனால், திமுக, அதிமுகவில் 90 சதவீதம் மூத்தவர்களே கோலோச்சும் நிலை உள்ளது. திமுகவுக்கு உதயநிதி எனும் இளம் முகம் இருப்பதால், அக்கட்சிக்கு இப்போது நெருக்கடி ஏதும் இல்லை. ஆனால், அதிமுகவில் இளம் தலைமை ஏதும் இல்லை.
அதுபோல மாநில, மாவட்ட நிர்வாகிகளும் அதிமுகவில் இளைஞர்களாக இல்லை. இதுதான் அதிமுகவின் முக்கிய பிரச்சினை என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள். அதிமுக ஐடி விங்க் கூட சில நாட்களுக்கு முன்பு, கட்சிக்கு இளம் ரத்தம் பாய்ச்ச வேண்டும் என்று வெளிப்படையாகவே ஒரு பதிவினை போட்டது. அதுபோல தஞ்சையை சேர்ந்த மகேந்திரன் எனும் இளைஞர் அதிமுகவின் ஒற்றுமைக்காக விபரீத முடிவெடுத்ததும் கவனிக்கத்தக்கது.
எப்படிப் பார்த்தாலும் அதிமுகவை குறைத்து மதிப்பிட முடியாது. ஏனென்றால் இந்த தேர்தலில் கிளீன் ஸ்வீப் செய்யலாம் என தவெக தலைவர் விஜய் நினைத்தார். அவர் தனக்கு முன்னால் இருக்கும் எதிரி என திமுகவை மட்டுமே டார்கெட் செய்தார், அதில் வெற்றியும் பெற்றார். ஆனால், அவர் அதிமுகவை கணக்கில் கொள்ளாமல் போனதே, தனிப்பெரும்பான்மையை பெற முடியாமல் போனதற்கு காரணம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
5 ஆண்டுகள் ஆட்சியில் இல்லை, முக்கிய தலைவர்கள் விலகல், கவர்ச்சிகரமான தலைமை இல்லை என்பன போன்ற பல மைனஸ்கள் இருந்தாலும் 2026-ல் அதிமுக 47 தொகுதிகளை தட்டி தூக்கியது. திமுகவை விட வெறும் 12 தொகுதிகளே குறைவு. அதேபோல் 1 கோடியே 4 லட்சத்து 62 ஆயிரத்து 146 பேர் (21.21%) அதிமுகவுக்கு வாக்களித்திருந்தனர். திமுகவை விட இது வெறும் 3 சதவீதம்தான் குறைவு.
அடுத்தடுத்து தலைவர்கள் விலகினாலும், அதிமுக இன்னும் அபாய கட்டத்துக்குள் நுழையவில்லை என்பதே நிஜம். சில மாற்றங்களை செய்து, இளைஞர்களை அதிகளவில் கட்சிக்குள் கொண்டுவந்து வியூகம் வகுத்தால் மீண்டும் அதிமுக வெற்றிக் கணக்கை தொடங்கவும் வாய்ப்புள்ளது என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.
சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலர் தவெகவில் இணையும் விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “அதிமுகதான் தவெகவின் தாய்க் கழகம். தவெகவுக்கும் அதிமுகவுக்கும் வேறுபாடுகள் இல்லை. அதிமுகவின் 90% நிர்வாகிகள் ஒரு மாதத்தில் தவெகவில் இணைவார்கள்” என்று சொன்னார். இதை அதிமுகவினருக்கு விரிக்கப்பட்ட மிகப் பெரிய வலையாக பார்க்க முடிகிறது. எதிர்காலத்தில் தவெக எதிர் திமுக என்பதை நிறுவ முயல்கிறார்கள்.
அதற்கு போட்டிக் களத்தில் அதிமுக மிக மிக பலவீனமாக வேண்டும் என்று தவெக கருதுகிறது. மேலும், அதிமுகவினர் உள்ளே வந்தால், அடுத்தடுத்து வரும் தேர்தல் களப்பணிகளுக்கும் உபயோகமாகும் என்றும் கணக்குப் போடுகிறார்கள். இதனையெல்லாம் பழனிசாமி எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதுதான் இப்போதைய கேள்வி.