

சென்னை: தலைமைச் செயலக நுழைவு வாயில் அருகே முதல்வரின் வாகனத்தை மறித்து மனு அளிக்க முயன்ற நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரு காவலர்கள் காயமடைந்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் துறைவாரி மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி முதல்வர் விஜய் தனது நீலாங்கரை இல்லத்திலிருந்து தலைமைச் செயலகம் நோக்கி நேற்று காலை சென்றார்.
அப்போது அவரது வருகைக்காக நுழைவு வாயில் எதிரே நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காத்திருந்தனர். முதல்வர் வாகனம் நுழைவு வாயிலை நெருங்கிய தருணத்தில், அங்கிருந்த சிலர் திடீரென பாதுகாப்பு தடுப்புகளை மீறி வாகனத்தை நோக்கி முன்னேற முயன்றனர்.
அங்கிருந்த பாதுகாப்புப் போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்த முற்பட்டபோது, கூட்டத்தில் இருந்த சிலர் போலீஸாரை தள்ளிவிட்டு முன்னேறி சென்றனர். இதனால் ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் காவலர் முத்து கணேஷ் கீழே விழுந்து காலில் பலத்த காயமடைந்தார்.
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் பதற்றத்தில் மற்றொரு காவலரின் கை பட்டு ராம்குமார் என்ற காவலருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர் தலைமை செயலக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, பாதுகாப்பு வளையத்தை மீறி உள்ளே நுழைய முயன்ற நபர்களை கோட்டை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மானாமதுரை காவல் சரகத்தில் கடந்த மார்ச் மாதம் காவலில் உயிரிழந்ததாக கூறப்படும் ஆகாஷ் என்ற இளைஞரின் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரி, அவரது பெற்றோர் ராஜேஷ் கண்ணன், ஆனந்தி மற்றும் தமிழ்நாடு இளையோர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் மனு அளிக்க வந்ததும், அப்போது போலீஸாரின் தடுப்புக்களை மீறி உள்ளே நுழைந்து முதல்வர் கான்வாயை வழிமறித்ததும் தெரியவந்தது. தலைமைச் செயலக வாசலில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.