

சென்னை: ‘சட்டப்பேரவையில் நடக்கும் சம்பவங்கள் ஆட்சி மாற்றத்துக்கே வழிவகுத்து விடும்’ என்று எம்எல்ஏ.க்களுக்கு நடந்த புத்தாக்க பயிற்சி முகாமில் பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் நாளை தொடங்குகிறது. இதையொட்டி, எம்எல்ஏக்களுக்கு 2 நாள் புத்தாக்க பயிற்சி முகாம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று தொடங்கியது.
புத்தாக்க பயிற்சியை முதல்வர் விஜய், குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, பேரவையில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், சட்டப்பேரவை விதிகள் குறித்து எம்எல்ஏ.க்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த முகாமில் தவெக மட்டுமல்லாது காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அமமமுக ஆகிய கட்சிகளின் எம்எல்ஏ.க்களும் கலந்து கொண்டனர்.
முன்னதாக பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் பேசியதாவது: இந்த அவையின் மூலமாக நீங்கள் ஒலிக்கிற குரல்தான் இந்த அரசுக்கும் தமிழக மக்களுக்கும் பெருமை சேர்க்கிற ஒரு குரலாக இருக்கும். நூலகங்களுக்குச் செல்கிற பழக்கத்தை எம்எல்ஏ.க்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
அப்போதுதான் அண்ணா, காமராஜர், கக்கன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் என்ன பேசினார்கள் என்று தெரியும். அதன்மூலமாக கண்ணியமாக, கவுரவமாக நாட்டு மக்கள் விரும்புகிற உரையை நீங்கள் தயார் செய்து கொள்ள முடியும்.
சட்டப்பேரவையில் நடக்கிற சில நிகழ்வுகளை வெளியிலே மக்கள் பார்க்கின்றார்கள் என்பது மட்டுமல்ல, ஒரு நிகழ்வு, ஒரு சம்பவம், ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஒரு கட்சிக்கு எதிராகத் திருப்பியதையும், ஒரு கட்சி ஆட்சிக்கு வருவதற்குத் துணை புரிந்ததையும் கடந்த கால சட்டப்பேரவை சம்பவங்களால் அறிந்து கொள்ள முடியும். எனவே எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.